மண்சரிவு அபாயத்தால் 11 குடும்பங்கள் இடம்பெயர்வு

மண்சரிவு அபாயத்தால் 11 குடும்பங்கள் இடம்பெயர்வு

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2015 | 9:35 pm

பதுளை – ஹப்புத்தளை, அம்பிட்டிகந்த தோட்டத்தில் ஏற்படும் மண்சரிவு அபாயத்தால் 11 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

கொஸ்லந்தை – மீரியபெத்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் முன்னெச்சரிக்கை அடிப்படையில் அம்பிட்டிகந்த தோட்டத்தில் வசிக்கும் 65 குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இடம்பெயரும் மக்களுக்கு தற்காலிகக் குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தோட்ட நிர்வாகம் இணக்கம் தெரிவித்திருந்ததாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

11 குடும்பங்களைச் சேர்ந்த 29 பேர் மாத்திரம் நேற்று அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அம்பிட்டிகந்த ஆரம்ப வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரதேசத்தில் தொடர்ந்தும் சீரற்ற வானிலை நிலவுவதால் மண்சரிவு அபாயம் உள்ள பகுதியில் தங்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவு ஏற்பட்டு ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் தற்காலிக இடங்களிலேயே தங்கியுள்ளனர்.

மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்கள் இன்று வரை மீள்குடியமர்த்தப்படாத நிலையில், மலையகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மண்சரிவுகள் ஏற்பட்ட வண்ணமே உள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்