தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாளை ஆராயவுள்ளது

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாளை ஆராயவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

15 Apr, 2015 | 8:29 pm

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நியமிக்கப்பட்ட குழு, நாளை கூடவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த, எதிர்கட்சியின் பிரதம கொரடா ஜோன் செனவிரத்ன அடங்கலாக தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் அண்மையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோரும் அந்த குழுவில் அடங்குகின்றனர்.

நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையில் மாற்றம் மேற்கொண்டு, தொகுதிவாரி முறைமையை கொண்டுவருதல் தொடர்பில் ஏற்கனவே யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

தேர்தல் முறைமையில் மாற்றம் மேற்கொள்வது குறித்து இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையையும் கவனத்திற்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 இலிருந்து 250 ஆக அதிகரிப்பதற்கும் இம்முறை யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆயினும், இந்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனும் கலந்துரையாடியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தல் முறைமையில் மாற்றம் மேற்கொள்வது குறித்து தேர்தல்கள் ஆணையாளரின் பரிந்துரைகளும் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் உயரதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்