அரசியல் கொலைகளின் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துக – சட்டத்தரணிகள்

அரசியல் கொலைகளின் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துக – சட்டத்தரணிகள்

எழுத்தாளர் Bella Dalima

15 Apr, 2015 | 7:29 pm

கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகளின் சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது காலத்தின் தேவை என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

நடராஜா ரவிராஜ் கொலை மற்றும் மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் வாதிடும் சட்டத்தரணி இதனைக் கூறினார்.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரவிராஜ் தமிழர்களிடையே மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்த அரசியல்வாதியாவார்.

தமிழர் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்திலும் வெளியிலும் அயராது குரல் கொடுத்து வந்தார் ரவிராஜ்.

இந்நிலையில், 2006 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி கொழும்பில் அவரது வீட்டின் அருகே வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றார்.

இந்த சம்பவம் இலங்கையில் மட்டுமின்றி சர்வதேச சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

நடராஜா ராவிராஜின் கொலை சம்பவம் குறித்து விசாரிக்க ஸ்கொட்லாந்து பொலிஸாரின் ஒத்துழைப்பை இலங்கை அரசு கோரியிருந்தது.

இந்தப் பின்புலத்தில் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் 9 வருடங்களின் பின்னர் கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் கடற்படையில் தற்போது பணியாற்றுபவர்.

ஏனைய இருவரும் கடற்படையில் முன்னர் பணியாற்றியவர்கள்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அதேவேளை, இந்தக் கொலையுடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையினர் மூவரிடமும், 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்கடத்தல்கள், கொலைகள் குறித்து விசாரிக்கப்படுகின்றன.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் 11 பாடசாலை மாணவர்கள் உட்பட 28 பேர் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற சம்பவத்துடனும் இந்த கடற்படையினர் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படுவதுடன் அது குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இந்த சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளரான கெப்டன் டி.கே.பீ. தசநாயக்க வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 28 பேர் சார்பாக, அவர்களின் உறவினர்கள் இம்மாதம் முதலாம் திகதி நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

காணாமற்போன தமது உறவுகள் தொடர்பில் சரியான தகவலை வழங்குமாறு அவர்கள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த சந்தேக நபர்கள் மேலும் பல சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக இந்த சம்பம் தொடர்பில் பாதிக்கப்பட்டோர் சார்பில் வாதிடும் சட்டத்தரணி தெரிவித்தார்.

இதேவேளை, ரவிராஜ் கொலை போன்று நடந்த பல அரசியல் கொலைகளுக்கும் விடை தெரியாமலே உள்ளது.

ரி.மகேஸ்வரன் பட்டப்பகலில் கோவிலில் கொல்லப்பட்டதற்கும், ஜோசப் பரராஜசிங்கம் கிறிஸ்மஸ் பண்டிகை அன்று தேவாலயத்தின் வாசலில் கொல்லப்பட்டதற்கும் அரசிடமிருந்து எந்த விளக்கமும், நடவடிக்கையும் இல்லை என்பது நாடறிந்த உண்மை.

இக்கொலைகளைக் கண்டுபிடித்து குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோளாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்