யேமனிலுள்ள இலங்கையர்களை சீன விமானம் மூலம் பஹ்ரேய்னுக்கு அழைத்துச் செல்ல திட்டம்

யேமனிலுள்ள இலங்கையர்களை சீன விமானம் மூலம் பஹ்ரேய்னுக்கு அழைத்துச் செல்ல திட்டம்

யேமனிலுள்ள இலங்கையர்களை சீன விமானம் மூலம் பஹ்ரேய்னுக்கு அழைத்துச் செல்ல திட்டம்

எழுத்தாளர் Staff Writer

04 Apr, 2015 | 9:54 am

யேமனில் மோதல்களினால் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை சீன விமானம் மூலம் பஹ்ரேய்னுக்கு அழைத்துச் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பஹ்ரேய்னில் இருந்து அவர்களை இலங்கைக்கு சொந்தமான விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

யேமனில் இடம்பெறும் மோதல்களினால் இலங்கையர்கள் 91 பேர் நிர்க்கதிக்கு உள்ளாகியிருப்பதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சீன விமானங்கள் யேமனின் வான் பரப்பை பயன்படுத்துவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படாத காரணத்தினால், இலங்கையர்களை அங்கிருந்து மீண்டும் நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கைகளில் தாமதம் நிலவியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் தெரிவிக்கின்றார்.

இந்த சூழ்நிலையின் கீழ், யேமனில் நிர்க்கதிக்கு உள்ளாகியிருந்த 3 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதுகுறித்து வினவியதை அடுத்து, குறிப்பிட்ட 3 இலங்கையர்களும், தனிப்பட்ட ரீதியில் நாட்டை வந்தடைந்துள்ளதால் அவர்கள் தொடர்பில் எதனையும் கூற முடியாதென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய கூறினார்.

இதேவேளை, யேமனில் நிர்க்கதிக்கு உள்ளாகியிருந்த தமது பிரஜைகள் 334 பேரை இந்தியா மீள நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான 2 விமானங்கள் மூலம் அவர்கள் நேற்றிரவு நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதன் பிரகாரம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இதுவரை தமது 692 பிரஜைகளை இந்திய மீண்டும் நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யேமனிலுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியாவின் நட்பு நாடுகள் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருகின்ற​ன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்