கடதாசி ஆலை ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

கடதாசி ஆலை ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2015 | 1:37 pm

நிலுவை சம்பளத்தை வழங்குமாறு கோரி, வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

ஐந்து மாத நிலுவை சம்பளத்தை வழங்குவதற்கு கைத்தொழில் அமைச்சு இணக்கம் தெரிவித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டதாக ஆலையின் பொது ஊழியர் சங்கம் தெரிவித்தது.

நிலுவை சம்பள விவகாரம் தொடர்பில் கைத்தொழில் அமைச்சின் செயலாளருக்கும், வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் நேற்று (01) மாலை பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

அமைச்சரவை அனுமதியுடன் முதல் மூன்று மாதங்களுக்குரிய நிலுவை சம்பளத்திற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஏனைய இரண்டு மாதங்களுக்கான நிலுவை சம்பளத்தை அமைச்சரவை அனுமதியுடன் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக கொழும்பில் நேற்று (01)  நடைபெற்ற கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணக்கப்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டதாக பொது ஊழியர் சங்க தலைவர் நாகமணி பேரின்பராஜா நியூஸ்பெஸ்டுக்கு கூறினார்.

இதனையடுத்து, இன்று (02) காலை கடதாசி ஆலைக்கு சென்ற ஊழியர்கள் மூன்று மாத நிலுவை சம்பளத்திற்கான காசோலையை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அத்துடன், நிலுவையிலுள்ள எஞ்சிய இரண்டு மாத சம்பளம் வழங்கப்படாத பட்சத்தில் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்