உரிமை உள்ளவர்கள் மாத்திரமே இங்கு மீன்பிடியில் ஈடுபடலாம் – பிரதமர்

உரிமை உள்ளவர்கள் மாத்திரமே இங்கு மீன்பிடியில் ஈடுபடலாம் – பிரதமர்

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2015 | 7:34 pm

நான்கு புறமும் கடலால் சூழப்பட்டுள்ள இலங்கைத் தீவில், மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களோ ஏராளம்.

தமது வாழ்வாதார தொழிலை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வெளிநாட்டு மீனவர்கள் மாத்திரமன்றி, வெளி மாவட்ட மீனவர்களும் இடையூறாக இருப்பதாக வட பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு செம்மலை – நாயாறு மீனவர்கள் வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறிய
மீன்பிடியாலும், மீன்பிடிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாலும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

நாயாறு பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த 73 மீனவர்களுக்கே, வடபகுதியில் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் 250 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி, இந்த மீனவர்கள் கரையோரத்திலும், ஆழ்கடலிலும் மீன்பிடிப்பதால் தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக செம்மலை மீனவர்கள் கூறுகின்றனர்.

இரவு வேளையில் மீன்பிடிப்பதற்கு தமக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் மீனவர்கள், வெளிமாவட்ட மீனவர்கள் அந்தப் பகுதியில் வாடிக் கொட்டகைகளை அமைத்து எவ்வித தடையுமின்றி மீன்பிடிப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

பூர்வீகமாக அந்தப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் தமக்கு, தொழிலை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்துதரப்பட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில், முல்லைத்தீவிற்கு நேற்று விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கும் செம்மலை – நாயாறு மீனவர்கள் கொண்டுவந்துள்ளனர்.

சம்பிரதாயபூர்வமாக உரிமை உள்ளவர்கள் மாத்திரமே இங்கு மீன்பிடியில் ஈடுபடலாம் எனவும். தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்துவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன் போது தெரிவித்துள்ளார்.

நாளாந்த வருமானத்தில் குடும்பத்தை கொண்டுநடத்தும் செம்மலை – நாயாறு பிரதேச மீனவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ள நிலையில், அவர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டுமென்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்