இன்று முதல் இலவச WI-FI வசதி

இன்று முதல் இலவச WI-FI வசதி

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2015 | 9:17 pm

நாடெங்கிலும் இலவச WI-FI வசதியை வழங்கும் திட்டம் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

100 நாட்கள் வேலைத் திட்டத்தின் வாக்குறுதிகளில் ஒன்றாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

திட்டத்தின் முதற்கட்டமாக கோட்டை ரயில் நிலையம், புறக்கோட்டை பஸ் தரிப்பிடம் மற்றும் தனியார் பஸ் தரிப்பிடம், தெஹிவளை மிருகக்காட்சி சாலை உள்ளிட்ட 12 இடங்களில் இன்றுமுதல் இலவச WI-FI வசதி வழங்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை ரயில் நிலையம், ஆதார வைத்தியசாலை, மாத்தறை ரயில் நிலையம், பஸ் நிலையம், காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாலை, ரயில் நிலையம், யாழ்ப்பாணம் ரயில் நிலையம் மற்றும் பொது நூலகம் ஆகியவற்றிலும் இலவசமாக WI-FI வசதியை பயன்படுத்த முடியும்.

கண்டி தலதா மாளிகை, கண்டி ரயில் நிலையம், பேராதனை ரயில் நிலையம் மற்றும் இரத்தினபுரி தேசிய அருங்காட்சியகத்திலும் WI-FI வசதியை பாவிக்கலாம்.

வலையமைப்பு சேவையை பயன்படுத்துவதனை அடிப்படை உரிமையாக ஏற்றுக்கொள்ளல் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்கு நாடெங்கிலும் 1000 WI-FI வலயங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கான நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.

இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்தியது போன்று, நாட்டில் சிக்கலை ஏற்படுத்தியுள்ள மோசடி தொடர்பிலும் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பிக்கப்பட்ட 26 WI-FI வலயங்களை விடவும், ஏனைய மாவட்டங்களிலும் WI-FI வலயங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவிக்கின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்