கெஹெலிய ரம்புக்வெல, சுனில் ஹந்துன்நெத்திக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

கெஹெலிய ரம்புக்வெல, சுனில் ஹந்துன்நெத்திக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

எழுத்தாளர் Bella Dalima

25 Mar, 2015 | 4:58 pm

முன்னிலை சோஷலிசக் கட்சியின் செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தம் காணாமற்போன சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை யாழ். நீதவான் பொ. சிவகுமார் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரை இன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த வழக்கு விசாரணையின்போது அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்களான இருவருக்கும், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஊடாக அழைப்பாணை விடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னிலை சோஷலிச கட்சியின் செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காணாமற்போயிருந்தனர்.

இவர்கள் காணாமற்போன​மை தொடர்பில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த விசாரணைகள் யாழ். நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

யாழ். மாவட்ட படைகளின் முன்னாள் கட்டளைத் தளபதி, அச்சுவேலி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் மாஅதிபர், சட்ட மாஅதிபர் உள்ளிட்ட ஐவர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

லலித் குகன் இருவரும் காணாமற்போன சிறிது காலத்தில் அவர்கள் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தமை ​தொடர்பில் சாட்சியமளிக்குமாறு முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கும் இரண்டு செயற்பாட்டாளர்களுடனும் இணைந்து செயற்பட்டமை தொடர்பில் சாட்சியமளிக்குமாறு சுனில் ஹந்துன்நெத்திக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்