அமெரிக்கா சென்ற பசில் ராஜபக்ஸவை விசாரணைக்காக இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை

அமெரிக்கா சென்ற பசில் ராஜபக்ஸவை விசாரணைக்காக இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2015 | 1:39 pm

திவி நெகும எனப்படும் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்காக பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் பிரிவினர், சட்டமா அதிபரின் ஆலோசனைகளை கோரியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்காக திவிநெகும திணைக்களத்தின் பணம் செலவிடப்பட்டமை, திவிநெகும கொடுப்பனவுகள் தொடர்பான முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பசில் ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த முறைகேடுகள் தொடர்பில் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகத்திடம் ஏற்கனவே பொலிஸார் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சரின் பணிப்புரைக்கு அமையவே பணம் வழங்கப்பட்டதாக திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் வாக்குமூலமளித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமையவே முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவிடம் இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றியபோதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முகத்தை முற்றாக மறைக்கும் தலைகவசம் அணிவதற்கான தடையை ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக உதவி பொலிஸ் அத்தடியட்சகர் ருவன் குணசேகர மேலும் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்