ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்கும் நிகழ்வு இன்று

ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்கும் நிகழ்வு இன்று

ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்கும் நிகழ்வு இன்று

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2015 | 10:09 am

பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியான சரத் பொன்சேகாவை, பீல்ட் மார்ஷல் பதவிநிலைக்கு உயர்த்தும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் விமான தளத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இலங்கை இராணுவத்தின் இந்த உயர்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதலாவது அதிகாரியாக சரத் பொன்சேகா திகழ்கின்றார் என, பதில் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவிக்கின்றார்.

1970ஆம் ஆண்டில் கெடட் உத்தியோகத்தராக இராணுவத்தில் இணைந்துகொண்ட சரத் பொன்சேகா, 2009 ஆம் ஆண்டில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றார்.

சுமார் 30 வருடகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட காலப்பகுதியில் இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா கடமையாற்றியிருந்தார்.

ஒருபோதும் ஓய்வுபெறாத பதவிநிலையான பீல்ட் மார்ஷல் பதவியானது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு சமமானதாகும்.

நாடொன்றின் முப்படையில் உயரிய பதவியாக பீல்ட் மார்ஷல் பதவி கருதப்படுகின்றது.

இந்த உயரிய பதவியான பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு நிகழ்வை முன்னிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு விசேட அடையாள சின்னமொன்றையும் கையளிக்கவுள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்வினை முன்னிட்டு இன்று பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

இதன்படி, காலி முகத்திடல் சுற்றுவட்டம் முதல் காலி வீதி, என்.எஸ்.ஏ சுற்றுவட்டம், லோட்டஸ் வீதி, செரமிக் சந்தி முதல் ஜனாதிபதி மாவத்தை வரையான பகுதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.

இந்த காலப் பகுதியில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்