சம்பூர் காணிகள் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது – டி.எம்.சுவாமிநாதன்

சம்பூர் காணிகள் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது – டி.எம்.சுவாமிநாதன்

எழுத்தாளர் Bella Dalima

20 Mar, 2015 | 5:56 pm

திருகோணமலை – சம்பூரிலுள்ள 818 ஏக்கர் காணியை மக்களுக்கு வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யுத்தம் மற்றும் அனல் மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகளினால் சம்பூர் பகுதியில் 1,694 ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டிருந்தது.

இதனால் 931 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டு கிளிவெட்டி, பட்டித்திடல் மற்றும் கட்டைப்பறிச்சான் ஆகிய நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அனல் மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக 2012ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக 1,458 ஏக்கர் நிலப்பரப்பு அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்தது.

இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த 219 குடும்பங்கள் காணிகளை இழந்துள்ளனர்.

அத்துடன், கடற்படையினரின் தேவைக்காக 236 ஏக்கர் நிலப்பரப்பு கடற்படையினரினால் சுவீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதனால் 712 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான காணிகளை மீள ஒப்படைக்கும் நோக்குடன் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இன்று மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஓஸ்டின் பெர்ணான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர், ஹாபீஸ் நஷிர் அஹமட், மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் ஹரின் பீரிஸ் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்