வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் உண்ணாவிரதம் தொடர்கிறது

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் உண்ணாவிரதம் தொடர்கிறது

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2015 | 7:41 pm

நிலுவையிலுள்ள 04 மாத சம்பளத்தை வழங்கக் கோரி வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் போராட்டம் 03 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

சம்பந்தப்பட்டவர்கள் இந்த ஊழியர்களின் வேண்டுகோளைக் குறித்து கவனத்திற் கொள்ளாமை மிகவும் வேதனை அளிப்பதாக போராட்டத்தில் ஈடுபடுவோர் தெரிவித்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி வாழைச்சேனை கடதாசி ஆலைக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதையடுத்து தொழிற்சாலையின் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இதன் காரணமாக வாழைச்சேனை கடதாசி ஆலையில் பணியாற்றி வந்த 235 ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் 17ஆம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான்கு மாத காலமாக சம்பளம் வழங்கப்படாமையால் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக, வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
03 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ, அதிகாரிகளோ பிரச்சினைகளை கேட்டறியவோ, தீர்வினை வழங்கவோ முன்வரவில்லை என்றும் ஊழியர் தமது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.

இதேவளை எதிர்வரும் 25ஆம் திகதி சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கும் கடிதம் ஒன்றை கடதாசிஆலையின் தவிசாளர் தொலைநகல் ஊடாக அனுப்பியுள்ளபோதும் அதனை நம்பத் தயாரில்லை என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

நேரடியாக வருகை தந்து 04 மாத சம்பளமும் வழங்கப்படும் என எழுத்துமூலம் வாக்குறுதியளிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கூறுகின்றனர்.

பழமை வாய்ந்த வாழைச்சேனைக் கடதாசி ஆலையின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் காரணமாக இத் தொழிற்சாலையை நம்பி வாழும் சுமார் 230இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்