இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷலாகவுள்ளார் ஜெனரல் சரத் பொன்சேகா

இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷலாகவுள்ளார் ஜெனரல் சரத் பொன்சேகா

இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷலாகவுள்ளார் ஜெனரல் சரத் பொன்சேகா

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2015 | 1:22 pm

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியான சரத் பொன்சேகா, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பீல்ட் மார்ஷல் பதவிநிலைக்கு உயர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ வைபவம் 22 ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

இலங்கை இராணுவத்தின் இந்த உயர்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதலாவது அதிகாரியாக சரத் பொன்சேகா திகழ்கின்றார்.

1970 ஆம் ஆண்டில் கெடட் உத்தியோகத்தராக இராணுவத்தில் இணைந்துகொண்ட சரத் பொன்சேகா, 2009 ஆம் ஆண்டில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றார்.

சுமார் 30 வருடகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட காலப்பகுதியில் இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா கடமையாற்றியிருந்தார்.

ஒருபோதும் ஓய்வுபெறாத பதவிநிலையான பீல்ட் மார்ஷல் பதவியானது, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவருக்கு சமமானதாகும்.

நாடொன்றின் முப்படையில் உயரிய பதவியாக பீல்ட் மார்ஷல் பதவி கருதப்படுகின்றது.

1970 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி கெடட் உத்தியோகத்தராக இணைந்துகொண்டதோடு இலங்கை இராணுவத்தின் முதலாவது சிங்க ரெஜிமன்ட் படையணியில் சரத் பொன்சேக்கா இணைந்துகொண்டார்.

லெப்டினன், கெப்டன், மேஜர் ஆகிய பதவிகளைத் தாண்டி அவர் 23 ஆம் படையணியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்ட போது அவருக்கு கேர்ணல் பதவி வழங்கப்பட்டது.

அவ்வேளையில் நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு கேணலாக சரத் பொன்சேகா தமது பங்களிப்பினை வழங்கினார்.

1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் திகதி பிரிகேடியராக பதவி உயர்வு பெற்ற சரத் பொன்சேகா 1998 ஆம் ஆண்டு பெப்ரவரி 23 ஆம் திகதி மேஜர் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்.

அதனையடுத்து 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 06 ஆம் திகதி சரத் பொன்சேக்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

புதிய நியமனத்தின் பின்னர் இராணுவத்தில் பல்வேறு மறுசீரமைப்புக்களை மேற்கொண்ட சரத் பொன்சேகா நாட்டில் நிலவிய ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் படைகளை வழிநடாத்தினார்.

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இராணுவ தலைமையகத்திற்குள் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் சரத் பொன்சேகா பலத்த காயங்களுக்குள்ளானார்.

யுத்தத்தின் போது அவர் பல தடவைகள் காயமடைந்த போதிலும் முன்னோக்கி பயணித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

சரத் பொன்சேகாவின் இராணுவ சேவையைப் பாராட்டி 2009 ஆம் ஆண்டில் அவர் ஜெனரல் பதவிநிலைக்கு உயர்த்தப்பட்டதுடன், அதே வருடத்தில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.

தாய் நாட்டிற்காக போராடிய ஜெனரல் சரத் பொன்சேகாவைப் பாராட்டி ரணசூர, ரணவிக்ரம, விஷிஷ்ட சேவா விபூஷன, உத்தம சேவா தேஷ புத்தர ஆகிய பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

30 வருட இராணுவ சேவையில் உயர்மட்ட சேவையின் பின்னர் ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலில் பிரவேசித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்