அரச உடைமைகளை மீள பொறுப்பேற்க விசேட ஜனாதிபதி செயலணி : அமைச்சரவை அனுமதி

அரச உடைமைகளை மீள பொறுப்பேற்க விசேட ஜனாதிபதி செயலணி : அமைச்சரவை அனுமதி

அரச உடைமைகளை மீள பொறுப்பேற்க விசேட ஜனாதிபதி செயலணி : அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2015 | 5:18 pm

முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரச உடைமைகளை மீள பொறுப்பேற்பதற்காக, விசேட ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை கூறினார்.

நாட்டிற்கு வெளியே கடத்தப்படுகின்ற பணத்தை மீண்டும் முழுமையாக பொறுப்பேற்பதற்காக, விசேட ஜனாதிபதி செயலணியை நிறுவுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

துபாய் தேசிய வங்கியில் இதுபோன்ற மூன்று கணக்குகள் பேணப்பட்டு வருகின்றமை குறித்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாவும் அமைச்சரவை பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய குடும்பமொன்றுடன் தொடர்புடைய சிலராலும், அவர்களுடன் தொடர்புடைய சில பாராளுமன்ற உறுப்பினர்களாலும் சுமார் 2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை அந்த கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட சில குடும்ப உறுப்பினர்கள் சிலரால் அந்த கணக்குகளில் இருந்து ஒரு தொகை பணம் மீளப் பெறப்பட்டு, வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக அமெரிக்க மற்றும் இந்திய விசேட நிறுவனங்களின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளதாக, அமைச்சரவை பேச்சாளர் கூறினார்

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை விடவும் அதிக தொகையான 10 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகை முன்னைய அரசாங்கத்திலிருந்த உறுப்பினர்களால் வெளிநாடுகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அந்த பணத்தை மீள நாட்டிற்கு கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்