உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம் – சுவிட்ஸர்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்

உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம் – சுவிட்ஸர்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்

உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம் – சுவிட்ஸர்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்

எழுத்தாளர் Bella Dalima

18 Mar, 2015 | 6:38 pm

இலங்கையின் நிலையான சமாதானத்திற்கும் அபிவிருத்திக்கும் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக சுவிஸர்லாந்து தெரிவித்துள்ளது.

யாழ், கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் சுவிட்ஸர்லாந்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட சுவிட்ஸர்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிடியர் பேர்க்ஹால்டர் இதனைக் கூறினார்.

யாழ். கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அக்கரை கிராமத்தில், சுவிட்ஸர்லாந்து நாட்டின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள சுவிட்ஸர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டிடியர் பேர்க்ஹால்டர் இந்த வீட்டுத்திட்டத்தைப் பார்வையிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,

[quote]இலங்கையின் சமாதானத்திற்கும் அபிவிருத்திக்கும் பல உதவிகளை நாங்கள் தொடர்ந்தும் வழங்குவோம். கடந்த 10 வருடங்களாக வீடுகள் மற்றும் பாடசாலைகளை நிர்மாணிப்பதற்கு நாம் உதவி வழங்கியுள்ளோம். தற்போது மாற்றமொன்றுக்காக புதிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. நிலையான சமாதானம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், தொழில் மற்றும் கல்விக்கான உதவிகளை வழங்குவதற்கும் எதிர்பார்த்துள்ளோம். வீட்டுத் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாதுள்ள போதிலும், கல்வி மற்றும் ஏனைய பொருளாதா அபிவிருத்தி நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம்.[/quote]

என்றார்.

இதேவேளை, சுவிட்ஸர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டிடியர் பேர்க்ஹால்டர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு இடையிலான சந்திப்பொன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில்,

[quote]தற்பொழுது நிலவும் சூழ்நிலை எவ்வாறு இருக்கின்றது என்பது பற்றி கேள்விகள் கேட்டார்கள். சூழ்நிலையில் மாற்றம் இருப்பதைக் குறிப்பிட்டு, அதேநேரத்தில் பல விதமான எதிர்பார்ப்புகள் இருப்பதாகவும் அறிவித்தேன். சில நேரங்களில் சற்று தாமதமானாலும் சூழ்நிலை மாற்றமும் மனோநிலை மாற்றமும் ஏற்பட்டால் நன்மையை அது கொண்டு வரக்கூடும் என்பதை அவர் எமக்கு எடுத்துரைத்தார்.[/quote]

என்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்