CIFL முன்னாள் தலைவரினால் 1.6 பில்லியன் ரூபா மோசடி – வைப்பாளர்கள் சங்கம்

CIFL முன்னாள் தலைவரினால் 1.6 பில்லியன் ரூபா மோசடி – வைப்பாளர்கள் சங்கம்

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2015 | 9:00 pm

தமது வைப்பின் 1.6 பில்லியன் ரூபா முன்னாள் தலைவர் ஒருவரினால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக CIFL வைப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மற்றும் சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக சங்கத்தின் தலைவர் விஜய குணவர்தன கூறினார்.

இது தொடர்பில் விரைவில் விசாரணைகளை மேற்கொண்டு தமது பணத்தை மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் இயங்கிய சென்ட்ரல் இன்வெஸ்மன்ட் அன்ட் பினேன்ஸ் எனப்படும் CIFL நிறுவனம் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் செயலிழந்தது.

இந்த நிதி நிறுவனத்தில் வைப்பீடு செய்த பணத்தைப் பெற்றுக்கொள்ள வைப்பாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை.

சுமார் 4200 வைப்பாளர்கள் 3.5 பில்லியன் ரூபா வைப்பீடு செய்துள்ளதாக CIFL வைப்பாளர்கள் சங்கம் தெரிவித்தது.

அவர்களில் அதிகமானவர்கள் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் பணத்தின் சுமார் 50 வீதத்தை மோசடியான முறையில் அதனுடன் தொடர்புபட்ட மற்றுமொரு நிறுவனத்தில் முதலீடு செய்தமை, குறித்த நிதி நிறுவனம் செயலிழப்பதற்கு காரணம் என வைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் இந்த நிதி நிறுவனம் எவ்வாறு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முடியும் என வைப்பாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த மோசடிக்கு பொறுப்புக்கூற வேண்டிய தலைவர் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக வைப்பாளர்கள் சங்கம் தெரிவித்தது.

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கொன்று விசாரணையில் உள்ளதாகவும் அதனை அவர்கள் புறக்கணித்து வருவதாகவும் வைப்பாளர்கள் சுட்டிக்காட்டினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்