ஷெணுக்காவிடம் ”விசாரணைக்கு பதில் தூதுவர் பதவி” – ரில்வின் சில்வா அதிருப்தி

ஷெணுக்காவிடம் ”விசாரணைக்கு பதில் தூதுவர் பதவி” – ரில்வின் சில்வா அதிருப்தி

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2015 | 8:04 pm

விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னர் ஷெணுகா செனவிரத்ன வெளிநாட்டுத் தூதுவர் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சில் இன்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பட்டது.

வெளிவிவகார பிரதி அமைச்சர் சட்டத்தரணி அஜித் பீ. பெரேரா தலைமையில் குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, வெளிவிவகார பிரதி அமைச்சர் சட்டத்தரணி அஜித் பீ. பெரேரா, அரசியல் நியமனங்களை வழங்கியவர்களை மீள அழைப்பதைப் போன்று ஷெணுகா செனவிரத்னவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது. ஒரு கடிதத்தினால் இவை அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவர முடியாது என தெரிவித்தார்.

நியமனத்தை இறுதியில் ஜனாதிபதியே மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த வெளிவிவகார பிரதி அமைச்சர், பாராளுமன்றத்தின் உயர்பதவி நிலை செயற்குழுவினால் ஆராயப்படுவதாகவும் அதன் பின்னரே தூதுவர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் குறிப்பிட்டார்.

இருப்பினும், மக்களிடம் இருந்தும், அரசியல் கட்சிகளிடம் இருந்தும் கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் தாம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர், ரில்வின் சில்வா, பாரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள ஒருவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக அவருக்கு தூதுவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

ஷெணுக்கா செனவிரத்ன கடந்த காலங்களில் நிதி மோசடியொன்றுடன் தொடர்புபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி முன்னர் அதிகளவில் குரல் கொடுத்தது. எனினும், ஆட்சிக்கு வந்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அவரை நாடொன்றின் தூதுவராக நியமித்துள்ளமை வரலாற்றில் இடம்பெற்ற மோசமான விடயமாகவே தாம் கருதுவதாகவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்