சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கோரி வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதம்

சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கோரி வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2015 | 3:38 pm

மட்டக்களப்பு – வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவித்து ஊழியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி நேற்றைய (16) தினமும் கடதாசி ஆலை ஊழியர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடதாசி ஆலையின் ஊழியர்கள் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் கூடாரம் அமைத்து அமைதியான முறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உண்ணாவிரம் இடம்பெற்ற இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா சென்றிருந்ததுடன், போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பௌத்த பிக்குவிற்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது

அதன்பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவிடம் கடதாசி ஆலை ஊழியர்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

தமது சம்பள பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் வரையில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக கடதாசி ஆலை ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, திறைசேரியூடான நிதி ஒதுக்கப்படும் பட்சத்தில், வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் நிலவும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என இலங்கை கடதாசி நிறுவனத்தின் வாழைச்சேனை ஆலைக்கான பொறுப்பதிகாரி சுனில் கந்தேகெதர நேற்று (16) தெரிவித்தார்.

மின்கட்டணம் உரிய முறையில் செலுத்தப்படாமையால் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிற்சாலையில் பணியாற்றிய சுமார் 235 ஊழியர்கள் தமது வாழ்வாதாரத் தொழிலை இழந்துள்ளனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்