இலங்கையின் முதலாவது உலகக் கிண்ணத்துக்கு இன்றுடன் 19 வருடங்கள்; நாளைய காலிறுதியில் வெற்றி நடை தொடருமா?(VIDEO)

இலங்கையின் முதலாவது உலகக் கிண்ணத்துக்கு இன்றுடன் 19 வருடங்கள்; நாளைய காலிறுதியில் வெற்றி நடை தொடருமா?(VIDEO)

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2015 | 11:29 am

19 வருடங்களுக்கு முன்னர் இதே போன்றதொரு நாளில் உலகமே இலங்கையை புகழந்த வண்ணம் இருந்தது. காரணம் வேறு எதுவுமல்ல இலங்கை கிரிக்கெட் அணி உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வெற்றி கொண்டு கிண்ணத்தை கைப்பற்றியதேயாகும்.

ஆறாவது உலகக்கிண்ண போட்டிகளில் டேவ் வட்மோரின் வழிகாட்டலுடனும் அர்ஜூன ரணதுங்கவின் தலமைத்துவத்துடனும் வெற்றி பெற வேண்டுமென்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

முதலாவது போட்டி அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெற இருந்த போதிலும் பாதுகாப்பு நிலைமைகளை காரணங் காட்டி அவ்வணி கொழும்பில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் அப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இரண்டாவதாக சிம்பாப்வேஅணியுடன் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது. இப்போட்டி கொழும்பில் இடம்பெற்ற போதிலும் சிம்பாப்வேஅணி பங்குபற்றியமை விசேட அம்சமாகும்.

இலங்கை அணி பங்குபற்றிய மூன்றாவது போட்டியும் கைவிடப்பட்ட போட்டியாகவே அமைந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியும் பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி போட்டியை பகிஷ்கரித்திருந்தது. இப்போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அடுத்த போட்டியல் அபாரமாக விளையாடிய இலங்கை அணி இந்தியாவுடன் 6 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சச்சின் சதமடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டித்தொடரின் 28 ஆவது போட்டியாக இடம்பெற்ற கென்யா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு சாதனைப் போட்டியாக அமைந்தது. ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையைப் பெற்ற அணி எனும் சாதனையை இலங்கை அணி படைத்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 398 ஓட்டங்களை விளாசியிருந்தது. இதில் அரவிந்தடி சில்வா 145 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இந்த சாதனை பின்னர் தென்னாபிரிக்க அணியினால் முறியடிக்கப்பட்டிருந்த போதிலும் பின்னர் இது மீண்டும் இலங்கை வசமானது.

sl win 1996 1

கென்யா அணியுடனான போட்டியில் இலங்கை அணி 144 ஓட்டங்களினால் வெற்றி பெற்றிருந்தது.

காலிறுதிப் போட்டிகளுக்குள் நுழைந்த இலங்கை அணி இங்கிலாந்தைச் சந்தித்தது. இப்போட்டியில் 5 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாக சனத் ஜயசூரியா தெரிவு செய்யப்பட்டார்.

இலகுவாக அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை அணி. இந்தியாவுடன் இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் நடைபெற்ற விடையங்கள் கிரிக்கெட் வரலாற்றின் துரதிஷ்ட வசமான நாளாக அமைந்தது. எனினும் அந்த நாள் இலங்கை அணிக்கு பொன்னான நாளாகும். முதன் முறையாக இலங்கை அணி உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 251 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி மோசமான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்தவே கோபம் கொண்ட ரசிகர்கள் மைதானத்தில் குழப்பத்தை உண்டுபண்ண ஆரம்பித்தனர். ஆட்டத்தை மேலும் தொடரமுடியாது போகவே இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

World Cup

 

SEMI 1996

 

இறுதிப்போட்டி 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி லாகூர் கடாபி விளையாட்டரங்கில் அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அணி சார்பில் டெய்லர் 74 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் அரவிந்தடி சில்வா 3 விக்கெட்டுக்களை கைப்பறினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 23 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த குருசிங்க மற்றும்  அரவிந்தடி சில்வா மூன்றாவது விக்கெட்டுக்காக 125 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். குருசிங்க ஆட்டமிழக்க களமிறங்கிய அர்ஜூன ரணதுங்க மிகச்சிறப்பாக விளையாடி அணியை கிண்ணத்தை நோக்கி கொண்டு சென்றார்.

arjuna

அரவிந்தடி சில்வா மற்றும் அர்ஜூன ரணதுங்க இறுதி வரை ஆட்டமிழக்காது முறையே 107 மற்றும் 47 ஓட்டங்களைக் குவித்தனர். இவர்கள் தமக்கிடையே வீழ்த்தப்படாத 94 ஓட்டங்களை பகிர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியில் 46.2 ஆவது ஓவரில் ரணதுங்க 4 ஓட்டங்களைப் பெறவே இலங்கை அணியின் வெற்றி உறுதியானது. 6 ஆவது உலகக்கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியது. போட்டியின் நாயகனாக   சதமடித்த அரவிந்தடி சில்வாவும் தொடரின் நாயகனாக சனத் ஜயசுரியாவும் தெரிவு செய்யப்பட்டனர்.

aravinda

 

sl win1996

 

World Cup

இந்நிலையில் 2015 ஆம் உலகக்கிண்ண போட்டியின் காலிறுதியில் தென்னாபிரிக்காவை சந்திக்கின்றது இலங்கை. இரண்டும் சம பலம் பொருந்திய அணி என்ற வகையில் எந்த அணி வெற்றி பெறும் என்பது உறுதியாக கூறமுடியாத விடயமாகும்.

இலங்கை அணி சார்பாக மிகச்சிறப்பாக விளையாடும் குமார் சங்கக்கார சிறப்பாக ஆடினால் இலங்கை அணியின் வெற்றி நிச்சயம். அத்துடன் மலிங்கவின் பந்துவீச்சும் சிறப்பாக அமைந்தால் மேலும் சிறப்பு. தென்னாபிரிக்கா சார்பாக டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடும் பட்சத்தில் இலங்கை அணி வெற்றி பெற கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

CRICKET-SRI-ENG

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்