இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2015 | 7:19 pm

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவ முகாமிற்காக சுவீகரிக்கப்பட்ட காணியை விடுவிக்குமாறு கோரி பிரதேச மக்கள் இன்று (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மத்தியப் பிரதேசத்திலுள்ள 19 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்களும் பிரதேச மக்களும் இணைந்து இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது காணிகளை மீளப்பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து, காணி உத்தியோகத்தர்கள் வெளியேறாத வகையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால், பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

இந்த மறியல் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடமாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்