அதிகரித்து வரும் கோவில் திருட்டு: தெனியாயவில் மூன்று சம்பவங்கள் பதிவு

அதிகரித்து வரும் கோவில் திருட்டு: தெனியாயவில் மூன்று சம்பவங்கள் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2015 | 7:34 pm

இந்துக் கோவில்களின் கதவுகளை உடைத்துத் திருடும் சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன.

இன்றும் தெனியாய பகுதியில் இரண்டு கோவில்களில் திருட்டு இடம்பெற்றுள்ளது.

தெனியாய E.W பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கதவு நேற்றிரவு (16) உடைக்கப்பட்டு கோவில் உண்டியலில் இருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

கோவிலில் இருந்த உண்டியல் எடுத்துச்செல்லப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

உண்டியல் குறித்த கோவிலிலிருந்து 150 மீற்றர் தொலைவில் உள்ள தேயிலைத் தோட்டத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தெனியாய அல்பந்தன்ன ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு பொட்டுத் தாலி கொள்ளையிடப்பட்டுள்ளது.

கோவிலில் இருந்த உண்டியலும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இவ்விரு கோவில்களிலும் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தெனியாய – என்சல்வத்த சின்னத்தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன.

நேற்றிரவு கோயில் நடைசாத்தப்பட்டதன் பின்னர் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்

மூலஸ்தான விக்கிரகத்தில் அணிவிக்கப்பட்டிருந்த நகையே கொள்ளையிடப்பட்டுள்ளது.

தெனியாய மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளின் கோவில்கள் ஏற்கனவே உடைக்கப்பட்டு தங்க நகைகள், தங்கத் தகடுகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் சூறையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்