ஷெணுகா செனவிரத்ன புதிய தூதுவராக நியமிக்கப்பட்டமை தவறு – ஜே.வி.பி குற்றச்சாட்டு

ஷெணுகா செனவிரத்ன புதிய தூதுவராக நியமிக்கப்பட்டமை தவறு – ஜே.வி.பி குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2015 | 7:26 pm

விசாரணைகள் நிறைவடைய முன்னர் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலளர் ஷெணுகா செனவிரத்னவை வெளிநாடொன்றின் தூதவராக சேவையில் நியமித்தமை அரசியல் மேடைகளில் அதிகளவில் விமர்சிக்கப்படுகிறது.

விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ள இந்த நியமனம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு நாட்டுக்கு தெளிவுப்படுத்த  வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜாதிக்க ஹெல உறுமய என்பன சுட்டிக்காட்டியுள்ளன.

ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை புனர்நிர்மாணம் செய்யும் கொடுக்கல் வாங்கலில் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக, ஷெணுகா செனவிரத்ன மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது.

அதிக பணம்  செலவிட்டமை மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புவைத்திருந்தாக கூறப்பட்ட ஒருவருக்கு ஒப்பந்தம் வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் அதில் முக்கியமானவை.

இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா ஷெணுகா செனவிரத்னவின் புதிய நியமனம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

ஷெணுக்கா செனவிரத்னவிற்கு எதிராக குற்றஞ்சாட்டொன்று முன்வைக்கப்பட்டிருக்கும் போது  அவரை தாய்லாந்தின் தூதுவராக நியமித்துள்ளதாகவும், அரச சேவையிலுள்ள ஊழியர் ஒருவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டோ, நிதி மோசடி குற்றச்சாட்டோ அல்லது ஒழுக்காற்று நடவடிக்கையோ முன்வைக்கப்பட்டால் அதுகுறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தீர்மானமொன்று எடுக்கப்படும் வரை அவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்