நியூசிலாந்திடம் தோற்றது பங்களாதேஷ்

நியூசிலாந்திடம் தோற்றது பங்களாதேஷ்

நியூசிலாந்திடம் தோற்றது பங்களாதேஷ்

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2015 | 3:35 pm

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

உலகக்கிண்ண லீக் கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 288 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக முகம்மதுல்லா ஆட்டமிழக்காமல் 128 ஓட்டங்களைக் குவித்தார்.

இதையடுத்து, 289 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் அபாயகரமான துடுப்பாட்ட வீரர் மெக்கல்லம் 8 ஓட்டங்களிலேயே வெளியேறினார். இருப்பினும், மற்றொரு தொடக்க வீரர் குப்தில் சிறப்பாக ஆடி சதமடித்தார். 105 ஓட்டங்கள் எடுத்த குப்தில், சகிப் உல் ஹாசன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

முதல் முறையாக உலகக்கிண்ண காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள பங்களாதேஷ் அணி, நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் தோல்வியே அடையாத நியூசிலாந்து அணியை வெற்றி பெறும் முனைப்பில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

சீரான இடைவெளியில் டெய்லர் (56), எல்லியட்(39), என நியூசிலாந்து அணி வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் ஒருகட்டத்தில் ஆட்டம் பங்களாதேஷ் அணிக்கு சாதகமாக செல்வது போல் இருந்தது.
இருப்பினும், கோரி ஆண்டர்சனின் (39) அதிரடியாட்டத்தால் நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து பங்களாதேஷை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் ஏ பிரிவில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

ஆட்டநாயகன் விருதை நியூசிலாந்து வீரர் குப்தில் பெற்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்