இந்தியப் பிரதமர் விஜயம்: பாராளுமன்றில் உரையாற்றியதுடன் கூட்டமைப்பினரையும் சந்தித்தார்

இந்தியப் பிரதமர் விஜயம்: பாராளுமன்றில் உரையாற்றியதுடன் கூட்டமைப்பினரையும் சந்தித்தார்

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2015 | 9:58 pm

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டிற்கு வருகை தந்தார்.

இந்திய அரச தலைவர் ஒருவர் 28 வருடங்களுக்கு பின்னர் உத்தியோகபூர்வ அரச விஜயமொன்றை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை 5.30க்கு நாட்டிற்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இந்தியப் பிரதமர் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்திருந்தார்.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையில் நான்கு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு உரித்துடையவர்களுக்கு விஸா அனுமதி விலக்கு, இரு நாடுகளுக்கும் இடையில் சுங்கம் தொடர்பான ஒத்துழைப்பு, இளைஞர் அபிவிருத்தி மற்றும் ரூஹூணு பல்கலைக்கழகத்தில் ரவீந்திரநாத் தாகூரின் நினைவு மண்டபத்தை நிர்மாணித்தல் தொடர்பான நான்கு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

இச்சந்திப்பையடுத்து, இந்தியப் பிரதமர் பாராளுமன்றம் சென்றிருந்தார்.

அவருக்கு பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் இன்று கிடைத்தது.

1962 ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு, 1973 ஆம் ஆண்டு இந்திரா காந்தி மற்றும் 1979 ஆம் ஆண்டு ஸ்ரீ மொராஜி தேசாய் போன்ற பிரதமர்கள், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றியிருந்தனர்.

எனினும், பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலேயே அவர்கள் இவ்வாறு உரையாற்றியருந்தனர்.

பாராளுமன்றத்திற்குள் உரையாற்றுவதற்கான வாய்ப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கே கிடைத்துள்ளது.

பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.

இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர், ஸ்ரீ ஜயவர்தனபுர பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர் நினைவுத் தூபிக்கு இந்தியப் பிரதமர் மலரஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தை தான் முழுமையாக அறிந்துள்ளதாகவும், அது தொடர்பில் அக்கறையுடன் செயற்படுவதாகவும் தன் மீது நம்பிக்கை வைத்து செயற்படுமாறும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்தது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே கூட்டமைப்பு இதனை தெரிவித்தது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது.

இந்த சந்திப்பு கொழும்பில் இன்று மாலை இடம்பெற்றது.

இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மருதானை மகாபோதி விஹாரைக்குச் சென்று, புனித சின்னங்களை வழிபாடு செய்தார்.

இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவர் பானகல உபதிஸ்ஸ தேரரினால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கப்பட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்