மே.இ தீவுகளை 257 ஓட்டங்களால் வீழ்த்தி இந்தியாவின் உலக சாதனையை சமப்படுத்தியது தென்னாபிரிக்கா

மே.இ தீவுகளை 257 ஓட்டங்களால் வீழ்த்தி இந்தியாவின் உலக சாதனையை சமப்படுத்தியது தென்னாபிரிக்கா

மே.இ தீவுகளை 257 ஓட்டங்களால் வீழ்த்தி இந்தியாவின் உலக சாதனையை சமப்படுத்தியது தென்னாபிரிக்கா

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2015 | 8:53 pm

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளை 257 ஓட்டங்களால் வென்ற தென் ஆபிரிக்கா, அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்தியாவின் உலக சாதனை வெற்றியை சமப்படுத்தியது.

போட்டியில் தென் ஆபிரிக்கா நிர்ணயித்த 409 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 151 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

சிட்னியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா சார்பாக ஹாசிம் அம்லா 65 ஓட்டங்களையும், டு பிலெசிஸ் 62 ஓட்டங்களையும், ரிலி ரொசோவ் 61 ஓட்டங்களையும் பெற்றனர்.

குறைந்த பந்துகளில் 150 ஓட்டங்களைக் கடந்து சாதனையை எட்டிய அணித்தலைவர் ஏபி டி விலியர்ஸ் 66 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 17 பௌண்டரிகள் அடங்கலாக 162 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தார்.

தென் ஆபிரிக்க அணி கடைசி 15 ஓவர்களில் 222 ஓட்டங்களைக் குவித்தது.

இதன்மூலம் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 408 ஓட்டங்களை தென் ஆபிரிக்கா பெற்றது.

இமாலய இலக்கான 409 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடிக்குள் தள்ளப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி 63 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் 56 ஓட்டங்களையும், டெவோன் ஸ்மித் 31 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி 33.1 ஓவரில் 151 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழக்க தென் ஆபிரிக்கா 257 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்று உலக சாதனை இலக்கை சமப்படுத்தியது.

பந்துவீச்சில் இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

2007 ஆம் ஆண்டு பேர்முடாவுக்கு எதிராக 257 ஓட்டங்களால் இந்தியா வெற்றிபெற்றதே உலகக் கிண்ண வரலாற்றில் சாதனையாக உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்