வத்தளை பிரதேச சபையில் அமைதியின்மை; தலைவர் உள்ளிட்ட நால்வர் வைத்தியசாலையில்

வத்தளை பிரதேச சபையில் அமைதியின்மை; தலைவர் உள்ளிட்ட நால்வர் வைத்தியசாலையில்

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2015 | 10:04 pm

வத்தளை பிரதேச சபையில் இன்று (30) காலை ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, தலைவர் தியாகரத்ன அல்விஸ் உள்ளிட்ட நால்வர் காயமடைந்து ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தலைவரை சபையில் இருந்து வெளியேற்றுவதற்கு சிலர் இன்று காலை முயற்சித்ததை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

வத்தளை பிரதேச சபையின் முன்னால் இன்று காலை அமைச்சர் ஜோன் அமரதுங்கவை வரவேற்கும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வத்தளை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

வைபவத்திற்கு வருகை தந்த அமைச்சர், பிரதேச சபையைக் கண்காணித்ததன் பின்னர் புறப்பட்டுச் சென்றார்.

தொடர்ந்து, பிரதேச சபை கூடிய சந்தர்ப்பத்தில், அங்கு வந்த சிலர் தலைவர் தியாகரத்ன அல்விஸை சபையில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தினர்.

அந்த சந்தர்ப்பத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் அழைக்கப்பட்டதுடன், பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் தலைவர் சபையில் இருந்து சென்றார்.

பின்னர் பிரதேச சபையின் உபதலைவர் சஞ்ஜீவ பெரேரா தலைமையில் சபை கூடியது.

சம்பவத்தில் காயமடைந்த வத்தளை பிரதேச சபைத் தலைவர் தியாகரத்ன அல்விஸ் மற்றும் ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்கள் ராகமை போதனா வைத்தியசாலையில்
சிகிச்சை பெறுகின்றனர்.

வத்தளை பிரதேச சபைத் தலைவரை சபையில் இருந்து வெளியேற்றுவதற்கு வருகை தந்தவர்களுள், வத்தளை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ரொய்ஸ் பெனோ பெர்னாண்டோவும் இருந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்