ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மற்றும் தற்போதைய தலைவர்கள் தொடர்பான ஓர் பார்வை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மற்றும் தற்போதைய தலைவர்கள் தொடர்பான ஓர் பார்வை

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2015 | 10:00 pm

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சியை விட்டு செல்லாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை இன்று வரை வகித்த முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கட்சியின் முன்னேற்றத்திற்காக அளப்பரிய சேவை ஆற்றியிருந்தார்.

1968 ஆம் ஆண்டு பெலியத்த தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராகத் தெரிவுசெய்யப்பட்ட அவர்  இரண்டு வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்.

அப்போதைய இளைய பாராளுமன்ற உறுப்பினராகவும் அவர் திகழ்ந்தார்.

அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் மஹிந்த ராஜபக்ஸ நாட்டிற்கு  சேவையாற்றினார்.

2009 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முனைப்புடன் செயலாற்றினார்.

அந்த இலக்கை எட்டுவதற்காக அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.

2010 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்ஸ பொதுநலவாய அமைப்பின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதுடன் இலங்கையின் நற்பெயரை சர்வதேச அரங்கில் நிலைநிறுத்தினார்.

அத்துடன், பரிசுத்த பாப்பரசரை  இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்த பெருமையும் அவரையே சாரும்.

மஹிந்த ராஜபக்ஸவினைத் தொடர்ந்து இன்று முதல் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட தலைவராகத் திகழ்கின்றார்.

அவர் தனது 17 ஆவது வயதில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவ இளைஞர் அமைப்பின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1971 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது மட்டக்களப்பில் சிறைவாசம் அனுபவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 1978 ஆம் ஆண்டு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலையான உறுப்பினரானார்.

சுதந்திரக் கட்சியின் இளைஞர் சம்மேளனத்தில் பதவிகளை வகித்து  பொலன்னறுவ மக்களின் ஆணையினால் 1982 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

2001 ஆம் ஆண்டில்  கட்சியின் பொது செயலாளராக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல அமைச்சுப் பதவிகளை வகித்து நாட்டிற்கு சேவையாற்றினார்.

2009 ஆண்டு மே மாதம் யுத்தத்தின் இறுதித் தருணத்தில் பல சந்தர்ப்பங்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் அவர்  தனது கடமையை அச்சமின்றி  நிறைவேற்றினார்.

2013 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு மற்றும் ஹாவட் பல்கலைக்கழகத்தின் விருதுகளை சுவீகரித்த அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சியை விட்டு செல்லாத தலைவராகவும் விளங்கினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்