ஊழல் செய்தோர் நாட்டைவிட்டு செல்லக்கூடாது: மக்கள் விடுதலை முன்னணி முறைப்பாடு

ஊழல் செய்தோர் நாட்டைவிட்டு செல்லக்கூடாது: மக்கள் விடுதலை முன்னணி முறைப்பாடு

எழுத்தாளர் Bella Dalima

13 Jan, 2015 | 9:37 pm

மக்கள் விடுதலை முன்னணி இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் இன்று (13) முறைப்பாடு செய்துள்ளது.

இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்த மக்கள் விடுதலை முன்னணியினர், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தடுக்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இதற்கு முன்னர் சமர்ப்பித்த சொத்து விபரங்கள் மற்றும் அவர்களது தற்போதைய சொத்து விபரங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, கோட்டபாய ராஜபக்ஸ, அஜிட் நிவாட் கப்ரால், அதேபோன்று, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட மேலும் சிலர் தொடர்பிலும் ஊழல் மோசடிகுறித்து முறைப்பாடு செய்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர், விஜித ஹேரத் தெரிவித்தார்.

[quote]கடந்த காலங்களில் அவர்கள் அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பாவித்துள்ளனர். அது தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் நாம் முறைப்பாடு செய்தோம். கடந்த காலங்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உரிய முறையில் செயற்படவில்லை. தற்போதுள்ள நிலைமையின் அடிப்படையில் ஆணைக்குழுவுக்கு உள்ள அதிகாரங்களுடன் உரிய முறையில் செயற்படும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றமை இந்த நாட்களில் வெகுவாக இடம்பெறுகின்றது. பசில் ராஜபக்ஸ தேர்தல்  நிறைவடைந்ததன் பின்னர் நாட்டிலிருந்து  வெளியேறியுள்ளார். அது மட்டுமல்ல மேலும் சில அமைச்சர்களின் மனைவிமாரும் பிள்ளைகளும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். எனவே, நாட்டிலிருந்து வெளியேறுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும். நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கின்ற அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்கு உள்ளது[/quote]

என்றார் பாராளுமன்ற உறுப்பினர், விஜித ஹேரத்.

இதன் போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்த ஒருவர் தனது முறைப்பாடு குறித்து விஜித ஹேரத்திற்கு தெளிவுபடுத்தினார்.

[quote]2012,  2013,   2014 ஆம் ஆண்டுகளில், இந்த ஆணைக்குழுவுக்கும், பொலிஸுக்கும், பொலிஸ் மாதிபரிடமும் முறைப்பாடு செய்திருக்கின்றோம். இன்று அந்த நபர் நாட்டை விட்டு வெளியேற முற்படுகின்றார். இந்தக் கணக்கில் காணப்பட்ட 290 கோடி ரூபா பெறப்பட்டுள்ளது.  எமது தலைவர் மக்களின் பணத்தில் ஊழல் செய்துள்ளார். விஜித்த, மஹிந்த கஹந்தகம என்ற அனைவரும் மஹிந்தவைப் போன்றவர்களே.[/quote]

என்றார் அந்நபர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்