சீரற்ற வானிலை காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறியவர்கள் தொடர்ந்து முகாம்களில்

சீரற்ற வானிலை காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறியவர்கள் தொடர்ந்து முகாம்களில்

சீரற்ற வானிலை காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறியவர்கள் தொடர்ந்து முகாம்களில்

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2015 | 8:11 am

சீரற்ற வானிலை காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ள ஐயாயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பான முகாம்களில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

இந்த மக்களுக்கு தேவையான நிவாரணங்களை தொடர்ந்தும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.

அண்மையில் நிலவிய சீரற்ற வானிலையால் நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் பதிவாகியிருந்த போதிலும், தற்போது நிலைமை ஓரளவு வழமைக்குத் திரும்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இயற்கை அனர்த்தங்களால் சுமார் 11 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்ததுடன், 39 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கூறினார்.

அத்துடன் 15 பேர் வரை காயமடைந்துள்ளதுடன், இயற்கை அனர்த்தங்களால் மேலும் இருவர் காணாமற்போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வானிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகின்றமையால் மக்கள் தங்களின் இருப்பிடங்களுக்கு திரும்பி வருவதாகவும், தற்போது 77 முகாம்களில் ஐயாயிரத்து 650 பேர் வரை தங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்