வன்முறைகளால் தேர்தலை வெற்றிகொள்ள முடியாது – மைத்திரி

வன்முறைகளால் தேர்தலை வெற்றிகொள்ள முடியாது – மைத்திரி

எழுத்தாளர் Kanthaverl Mayooran

04 Jan, 2015 | 9:20 pm

வன்முறைகளால் ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொள்ள முடியாது என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பக்கமூனவில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளர் மைதிரிபால சிறிசேன

[quote]எமது உயிரை பணயம் வைத்தே இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றோம். ஆகவே இதனை விளையாட்டாக கருத வேண்டாம் என மிகவும் தெளிவாக கூறுகின்றேன். சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க , சரத் பொன்சேகா மற்றும் எனது உயிருக்கும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது. இவற்றை எதிர்கொள்வோம். பின்னோக்கி செல்ல மாட்டோம். இந்த தேர்தலை நாம் எதிர்கொள்வோம். எமது பிணங்களுக்கு மேல் வன்முறை ஊடாக மஹிந்த ராஜபக்ஸ தேர்தல்களில் வெற்றிப்பெற நினைத்தால் அது ஒருபோதும் இடம்பெறாது.[/quote]

என குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தமது உயிர் மக்களின் பொறுப்பில் உள்ளதாக குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்

[quote]

மோசடியான கொலைகார இந்த ஆட்சியை நாம் உடனடியாக மாற்ற வேண்டும். ஜனாதிபதி எதனை பேசுகின்றார் என்று தெரியவில்லை. உளருகின்றார். அதிகாரத்தை விட்டு செல்ல அவர்களுக்கு விருப்பம் இல்லை. தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதே அவர்களது அவா. நாம் ஆரம்பித்த இந்த தூய்மையான போராட்டத்தை 8 ஆம் திகதி வெற்றிப்பெறும் வரை கைவிடப்போவதில்லை. ஜனாதிபதி எதனை செய்தாலும் எமது உயிர்கள் மக்களின் பொறுப்பில் உள்ளது. நீங்கள் எமக்காக முன்னில்லுங்கள். எம்மை பாதுகாத்துக் கொள்ளுங்கள் இந்த போராட்டத்தை நாம் வெற்றியீட்டிக் காட்டுகின்றோம்.

[/quote]

இதேவேளை தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படையணிகளைத் தவிர்ந்த இயலுமான அனைத்து பொலிஸ் படையணிகளையும் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்துமாறு பொலீஸ் மாஅதிபரிடம் கோரிக்கை விடுப்பதாக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

அத்துடன் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களில் ஈடுபடுத்திய பின்னர் இராணுவ வீரர்கள் எஞ்சியிருந்தால் இராணுவ படையணியொன்றை அல்லது இரண்டு படையணிகளை மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பிற்காக  ஈடுபடுத்துங்கள் என இராணுவ தளபதியிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்