பெல்மதுலை பிரசாரக் கூட்டத்தில் தாக்குதல்; இருவர் கைது

பெல்மதுலை பிரசாரக் கூட்டத்தில் தாக்குதல்; இருவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

03 Jan, 2015 | 3:53 pm

பெல்மதுலை பகுதியில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பெல்மதுலை பஸ் தரிப்பிடம் முன்பாக நேற்று (02) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் எதிர்கட்சி அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மைத்ரிபால சிறிசேன கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.

கற்களால் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அந்தப் பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர். 

இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார். 

இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான இருவரும் காவத்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இரத்தினபுரி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இந்த தாக்குதல் குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு பொலிஸார் உரிய பாதுகாப்பு வழங்கியிருந்த போதிலும், கூட்டத்தை குழப்புவதற்காக சில விஷமிகள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்