வடக்கு, கிழக்கில் பல மாவட்டங்களில் தொடர்ந்தும் மழை; ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்வு

வடக்கு, கிழக்கில் பல மாவட்டங்களில் தொடர்ந்தும் மழை; ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்வு

வடக்கு, கிழக்கில் பல மாவட்டங்களில் தொடர்ந்தும் மழை; ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்வு

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 7:20 pm

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையால் பல தாழ்நிலப் பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

கிண்ணியா மாஞ்சோலை பாலம் உடைந்துள்ளமையினால் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன், குட்டிகராச்சி மற்றும் குறுச்சாக்கேணி பாலம் ஆகியன வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மாவிலாறின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால், மாவடிச்சேனையில் உள்ள சுமார் 150 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் இடைக்கிடை பலத்த மழை பெய்வதாகவும், குளங்கள் வான் பாய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பரந்தன் – முல்லைத்தீவு வீதியின் நெத்தலியாறு தற்காலிக பாலத்தின் ஊடான போக்குவரத்து சிக்கல்களுக்கு மத்தியில் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் இருந்து வட்டக்கச்சி செல்லும் பெரியகுளம் வீதி வெள்ளத்தில் நிரம்பியுள்ளதால், போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் வானிலை வழமைக்குத் திரும்பிய போதிலும், போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் சில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பட்டாபுரம், கோயில் போரதீவு ,பெரிய போரதீவு, பழுகாமம் போன்ற  கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பெரிய போரதீவு பாரதி வித்தியாலயத்தில் பட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 387 பேர்  தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழை தொடர்வதனால், தற்காலிக வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

இந்துபுரம், பனிக்கன்குளம், சிராட்டிகுளம், துணுக்காய், முள்ளிவாய்க்கால், முத்தையன்கட்டு, மாணிக்கபுரம், கொக்கிளாய், தண்டுவான், பண்டாரவன்னி உள்ளிட்ட கிராமங்களில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முத்தையன்கட்டு பகுதியைச் சேர்ந்த 370 பேர், முத்தையன்கட்டு இடதுகரை தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ந்தும் தங்கியுள்ளனர்.

அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலியா – பிறவுன்விக் தோட்டத்தின் – எமலினா பிரிவில் மண்சரிவினால் 11 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் இடம்பெயர்நத்து மொட்டிங் ஹேம் தமிழ் வித்தியாலத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 28 ஆயிரத்து 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் எட்டாயிரத்து, 844 பேர், 39 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மன்னாரில் இன்றும் தொடர்ச்சியாக மழை பெய்வதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

மல்வத்து ஓயாவின் நீர்த்தேக்கம் அதிகரித்துள்ளதால், முருங்கனில் இருந்து சிலாத்துறை செல்கின்ற வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்