நல்லாட்சியை கருத்திற் கொண்டே மைத்திரிபாலவிற்கு ஆதரவு வழங்கினோம் என்கிறார் ஹக்கீம்

நல்லாட்சியை கருத்திற் கொண்டே மைத்திரிபாலவிற்கு ஆதரவு வழங்கினோம் என்கிறார் ஹக்கீம்

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2014 | 7:45 pm

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று அறிவித்தது.

நல்லாட்சியை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்திற்கு வந்ததாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையமான தாருஸ்சலாமில் இன்று இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

[quote]எல்லோருடைய கருத்துக்களையும் செவிமடுத்து, இந்த தேர்தலில் பொது அபேட்சகர் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரிப்பது என்ற தீர்மானத்திற்கு வந்திருக்கின்றோம். இந்த ஜனாதிபதி தேர்தலின் போது இந்த நாட்டிலே மீண்டும் நல்லாட்சி மீண்டும் மலர்வதற்கான ஒரு சூழலை அமைப்பதற்கு நல்ல வாய்ப்பு கிட்டியிருப்பதாக நாங்கள் உணர்கின்றோம். அதனடிப்படையிலே முஸ்லிம் காங்கிரஸின் இந்த தீர்மானம் வேறு எந்த காழ்ப்புணர்ச்சிகளும் இல்லாமல் தேவையற்ற விமர்சனங்கள் செய்கிற ஒரு தேர்தல் பிரசாரமாக இல்லாமல் மிகப்பக்குவமாக நேர்மையாக மக்களுக்கு, இந்த தீர்மானத்தின் சரியான அம்சங்களை கொண்டு செல்கின்ற பிரசார நடவடிக்கையை எஞ்சியிருக்கும் 7 நாட்களிலும் செய்வதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முழு மூச்சுடன் செயற்படும் என கூறிக்கொள்கிறேன்.[/quote]

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் 08 பாராளுமன்ற உறுப்பினர்களும், 13 மாகாண சபை உறுப்பினர்களும், 163 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பதவி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பதிலளித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்