சீரற்ற வானிலையால் 9 இலட்சம் மக்கள் பாதிப்பு 80,000 பேர் இடம்பெயர்வு (Special report)

சீரற்ற வானிலையால் 9 இலட்சம் மக்கள் பாதிப்பு 80,000 பேர் இடம்பெயர்வு (Special report)

சீரற்ற வானிலையால் 9 இலட்சம் மக்கள் பாதிப்பு 80,000 பேர் இடம்பெயர்வு (Special report)

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2014 | 4:17 pm

வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக 9 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

எண்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சீரற்ற வானிலையால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர்.

இதுதவிர மண்சரிவு அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு அதுகுறித்து தெளிவுபடுத்துவதற்கும், கூடுதல் அவதானம் நிலவுகின்ற பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

சீரற்ற வானிலைக் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

வவுனியாவிலும் மழை சற்று ஓய்ந்துள்ள போதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் காரணமாக திருகோணமலை மட்டக்கப்பு பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை மன்னார்- யாழ்ப்பாணத்திற்கான பிரதான வீதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் மொஹமட் ரியாஸ் தெரிவிக்கின்றார்.

பதுளை மாவட்டத்தில் கடும் மழைக் காரணமாக பல தோட்டப் பகுதிகளிலுள்ள மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இதனிடையே வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமானது நாட்டிற்கு கிழக்காக நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, மண்மேடு சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த நுவரெலியா நகருக்குள் பிரவேசிக்கும் சகல வீதிகளும் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மாவட்ட செயலாளர் டி.பீ.ஜீ. குமாரசிறி தெரிவிக்கின்றார்.

எனினும், நுவரெலியா – இராகலை – வதுமுல்ல – தியனில்ல வீதி ஊடான வாகனப் போக்குவரத்து இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை.

இந்த வீதியில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் கூறினார்.

மழை வெள்ளத்தினால் பொலன்னறுவை மாவட்டத்தில் 5,641 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மேலதிக மாவட்ட செயலாளர் பபாசீலி ஜயலத் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்