சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்; பலர் இடம்பெயர்வு (VIDEO)

சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்; பலர் இடம்பெயர்வு (VIDEO)

சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்; பலர் இடம்பெயர்வு (VIDEO)

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2014 | 1:22 pm

சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழக்கை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. குறிப்பாக மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

அதிக மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் 80,736 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார். 6, 50,635 பேர் மழைவெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மண்சரிவு , மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால் பல பிரதான வீதிகளின் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

கண்டி வத்தேகம பம்பரல்ல பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் வீதியுடனான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலும், ஹட்டன் நுவரெலியா வீதியில் நானுஓயா  பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாகவும் எமது ஹட்டன் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இதனிடையே, பதுளை , பசறை பிரதான வீதியில் ஆறாம் கட்டை பகுதியில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால் போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பசறை மடுல்சீமை – எக்கிரிய வீதியில் மண்சரிவு ஏற்ட்டுள்ளதால் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

இதேவேளை, மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் மண்சரிவு, கற்பாறை புரள்வுகள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஹட்டன் , நுவரெலியா மற்றும் பதுளை மஹியங்கனை ஆகிய பகுதிகளில் வீதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதால் மிக அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த மழையினால் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிக்கின்றது. களனி கங்கை மற்றும் நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக திணைக்களத்தின் நீர் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் பிரேமா ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

களனிகங்கையின் நாகலகம்வீதிய நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மூன்று தசம் 2 அடி வரை உயர்ந்துள்ளதாக கொழும்பு வலயத்திற்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பணிப்பாளர் ஜி.கே பத்மகீர்த்தி கூறினார்.

தொடர்ச்சியாக பலத்த மழை பெய்வதால், எதிர்வரும் சில மணித்தியாலங்களில் குறித்த பகுதிகளை அண்மித்த இடங்களில் சிறு வெள்ளம் ஏற்படக் கூடுமென அவர் குறிப்பிட்டார்.

அனர்த்த அபாய எச்சரிக்கை தொடர்பில், களினி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, மவுசாகலை, காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், காசல் ரீ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

மவுசாகலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் எந்நேரமும் திறக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ள அமைச்சு, இந்த நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் களனி கங்கைக்கு வெளியேற்றப்படுவதாக குறிப்பிட்டது.

இதனால் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடுமெனவும், கங்கையின் இரு மருங்கிலும் உள்ளவர்களை பாதுகாப்பாக இருக்குமாறும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் பெய்யும் அடை மழையினால் பிரதான வீதிகள் பலவற்றின் ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கொழும்பு – குருநாகல் வீதியின் ஐந்தாம், ஆறாம் பிரிவுகளில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேலும், நுவரெலியா நகருக்குள் பிரவேசிக்கும் பிரதான வீதிகள் சிலவற்றில் மண்மேடு சரிந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி குமாரசிறி குறிப்பிட்டார்.

மண்மேடு சரிந்து விழுந்துள்ளதால் கண்டி, ரன்தெனிகல ஊடாக பதுளை வரையான வீதி உள்ளிட்ட பல வீதிகள் தடைப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார தெரிவித்தார்.

கலேவெல, கலபிட வாவி பெருக்கெடுத்துள்ளதால், கொழும்பு – அனுராதபுரம், கொழும்பு, பொலன்னறுவை மற்றும் கொழும்பு – திருகோணமலை வீதியின் புவக்பிட்டிய பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதேவேளை, குருநாகல் – கொழும்பு வீதியிலும் வெள்ளத்தினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

கேகாலை மாவட்டத்தின் ரம்புக்வெல், வரக்காபொல, புளத்கொஹூபிட்டிய, ருவன்வெல்ல மற்றும் எட்டியாந்தோட்டை பிரதேசங்களின் 53 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேவேளை, மண்மேடு சரிந்து விழுதல் மற்றும் கற்பாறைகள் உடைந்து விழுதல் காரணமாக, பதுளையில் இருந்து, பஸ்ஸர, மகியங்கனை, வெலிமடை மற்றும் பண்டாரவளை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மொனராகலை மாவட்டத்தின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். யடவத்த மற்றும் தீனில்ல பகுதிகளில் மண்மேடு சரிந்துவிழுந்ததில், மாத்தளை – குருநாகல் பிரதான வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

மாத்தளை, நாவுல, நாலந்தா நீர்த்தேக்கத்தின் மட்டத்தில் இருந்து 03 அடிக்கு மேலாக இன்று காலை முதல் நீர் வெளியேற்றப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 27 வருடங்களின் பின்னர் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும், அதனால் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்