சீரற்ற வானிலையால் 80,000 மக்கள் இடம்பெயர்வு; ஆறு இலட்சம் மக்கள் பாதிப்பு

சீரற்ற வானிலையால் 80,000 மக்கள் இடம்பெயர்வு; ஆறு இலட்சம் மக்கள் பாதிப்பு

சீரற்ற வானிலையால் 80,000 மக்கள் இடம்பெயர்வு; ஆறு இலட்சம் மக்கள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2014 | 1:15 pm

அதிக மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் எண்பதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

ஆறு இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் உள்ளிட்ட சில மாகாணங்களிலும், கேகாலை, பதுளை, ஹம்பாந்தோட்ட உட்பட மேலும் சில மாவட்டங்களிலும் மழையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை அம்பன் கங்கை பெருக்கெடுத்துள்ளமையால் நாவுல பிரதேசத்தின் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

நிலவும் மழையுடன் கூடிய வானிலையை அடுத்து சில மாவட்டங்களில் கற்கல் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழும் பாரிய அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு பிரவின் பிரதான ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்தார்.

இதேவேளை, கொத்மலை ஓயா மற்றும் மகாவலி ஆற்றைப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மகாவலி அதிகார சபை அறிவித்துள்ளது.

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதால், நீர்த் தேக்கத்தின் தாழ்வாக அமைந்துள்ள கொத்மலை ஓயா மற்றும் மகாவலி ஆறுகள் ஆபத்தாக அமையலாம் எனவும் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மகாவலி கங்கையின் உலப்பனையில் இருந்து கம்பளை, வெலிகல்ல, கெலிஓயா, பேராதனை, கட்டுகஸ்தோட்டை மற்றும் பொல்கொல்ல வரையான பகுதிகளில் ஆற்றில் இறங்குவது ஆபத்தாக அமையலாம் என்றும் மகாவலி அதிகார சபை எச்சரித்துள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய 184.4 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி போவதென்ன பகுதியில் பதிவாகியுள்ளது.

உக்குவெல பகுதியில் 15.2 மில்லிமீற்றரும், குருநாகலில் 137.6 மில்லிமீற்றரும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கிழக்கு, தென்கிழக்கு தென் மாகாணங்களின் கடற்பிரதேசங்கள் அபாயகரமானதாகவும், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றருக்கும் அதிகமாக வீசும் எனவும் கூறப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்