அரசியல் தலைவர்களின் நத்தார் வாழ்த்துகள்

அரசியல் தலைவர்களின் நத்தார் வாழ்த்துகள்

அரசியல் தலைவர்களின் நத்தார் வாழ்த்துகள்

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2014 | 11:03 am

அச்சுறுத்தல்கள் மற்றும் பயங்கரவாத சவால்களை எதிர்நோக்கியுள்ள இன்றைய உலகம் கிறிஸ்தவ போதனைகளின் மூலம் நன்மையடைய முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அன்பு, அடக்கம் என்ற கிறிஸ்தவ மானிடச் செய்தியை இயேசு பிரான் அவதரிப்பில் இருந்தே உணர முடிவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

குடும்பங்கள் ஒன்றிணைவதற்கும், சமூக மற்றும் தடைகளையும் தாண்டி அன்பளிப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்குமான ஒரு சந்தர்ப்பம் என்ற வகையில் நத்தார் பண்டிகை அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததொரு பண்டிகையாகும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இலங்கை வாழ் எல்லா கிறிஸ்தவ மக்களுக்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக தமது வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும், ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நம்மத்தியிலுள்ள ஒளிக்கீற்றுகளை இருள் சூழ்ந்திடாது பேணுவதற்கு நத்தார் தினத்தில் உறுதிபூண வேண்டும் என தமது நத்தார் தின செய்தியில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சியின் மூலம் திருப்திகரமான சமூகமொன்றை மீளக் கட்டியெழுப்புவதன் ஊடாக ஒளிமயமான தேசத்தை உருவாக்க வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இன்றைய நத்தார் பண்டிகையை முன்னிட்டு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவும், நத்தார் தின செய்தியொன்றை விடுத்துள்ளார்.

நத்தார் சமயத்தில் பணிவன்பு குறித்து மாத்திரமின்றி, இயேசு கிறிஸ்து உலகிற்கு அவதரித்ததன் நோக்கம் குறித்தும் சிந்திப்பது இன்றியமையாத விடயமாகும் என மைத்ரிபால சிறிசேன குறிப்பிடுகின்றார்.

இயேசு கிறிஸ்துவை முறையாக பின்பற்றுவதற்கு நத்தார் காலப்பகுதியில் கிறிஸ்தவ மக்கள் எடுக்கும் தீர்மானம், நிச்சயமாக மனங்களில் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்றுவதுடன், நத்தாரின் மகிமையை உணர்வதற்கும் காரணமாக அமையும் என மைத்ரிபால சிறிசேன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்