மைத்திரிபாலவின் பிரசார மேடைமீது தாக்குதல் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் பொலிஸார் பார்த்துக்கொண்டிருந்தனர் – அஜித் ரோஹன

மைத்திரிபாலவின் பிரசார மேடைமீது தாக்குதல் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் பொலிஸார் பார்த்துக்கொண்டிருந்தனர் – அஜித் ரோஹன

மைத்திரிபாலவின் பிரசார மேடைமீது தாக்குதல் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் பொலிஸார் பார்த்துக்கொண்டிருந்தனர் – அஜித் ரோஹன

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 12:33 pm

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கூட்டத்திற்காக வெல்லம்பிட்டியவில் அமைக்கப்பட்டிருந்த மேடைமீது சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் தலைமையகம் கூறுகின்றது.

கடமையில் இருந்த பொலிஸார் சம்பவம் இடம்பெற்றபோது நடவடிக்கை எடுக்கத் தவறியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு தன்னியக்க துப்பாக்கியொன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

[quote]குறித்த இடத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவம் இடம்பெற்றபோது அங்கிருந்தமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிஸ் ரோந்து வாகனமும் அங்கிருந்துள்ளது. சந்தேகநபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச்செல்லும் வரை அங்கிருந்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேடை அமைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் எதிர்ப்பார்க்கின்றோம். கடமையை நிறைவேற்றத் தவறிய மற்றும் குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு அவர்கள் உடந்தையாக இருந்தமை தெரியவரும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். [/quote]
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொலன்னாவ தொகுதி அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் நியூஸ்பெஸ்ட்டுக்கு கருத்து வெளியிட்டார்.

[quote]கடந்த தேர்தல் காலங்களில் போன்று கொலன்னாவை மீண்டும் மீட்கப்படாத பயங்கரவாத வன்முறை நிறைந்த பிரதேசமாக மாறியுள்ளது. இன்று நடைபெறவுள்ள கூட்டத்திற்காக மேடையை அமைத்து நேற்றிரவு அதனை அலங்கரித்துக்கொண்டிருந்தபோது, பொலிஸாரின் கண் எதிரே மூன்று வேன்களில் வந்த ஆயுதமேந்திய குழு மேடைமீதும் வானை நோக்கியும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டது. பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது ஆயுதங்களுடன் வாகனங்களில் இருந்தவாறே பார்த்துக்கொண்டிருந்தனர். பொலிஸார் ஏன் இப்படி செயற்படுகின்றார்கள் என்ற சந்தேகம் எம்மிடம் உள்ளது. இவ்வாறு வந்த வேன்களில் ஒன்றை நாம் அடையாளம் கண்டோம். அந்த வேனில் வந்த சிலரே கடந்த சனிக்கிழமை இரவு கொட்டிக்காவத்தை சந்தியில் எமது சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தவர்கள்மீது ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி வாளால் வெட்டியிருந்தார்கள். ஆகவே பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில் பாரிய சந்தேகம் உள்ளது. இதனைத் தவிர எனது வீட்டுக்கு அருகே இலக்கத்தகடுகள் அற்ற டிபென்டர் ரக வாகனங்கள் சென்று வருகின்றன. கொலன்னாவையில் இத்தகைய நிலைமையை உருவாக்குவதற்கும் இந்தப் பகுதியை மீட்கப்படாத பகுதியாக மாற்றவும் முயற்சிப்பவர்கள் தொடர்பில் எமக்கு சந்தேகம் உள்ளது. பொலிஸார் இந்த விடயத்தில் அசமந்தப்போக்குடன் செயற்படுகின்றமை தொடர்பில் எமக்கு சந்தேகம் உள்ளது. பொலிஸாருக்கு அக்கறை இல்லையா என்ற கேள்வி எழுகின்றது.. இன்றைய கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளோம். தோல்வியின் நிழலை கண்டு அச்சம் கொண்டே இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். எந்தவொரு சவாலுக்கு மத்தியிலும் இன்றைய கூட்டத்தை ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு வெற்றிகரமாக நடத்தி முடிப்போம்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்