நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 11:59 am

நுவரெலியா, பதுளை, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு நேற்றிரவு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை  தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் மழையுடன் கூடிய வானிலை நிலவுவதால், அந்த பகுதிகளிலுள்ள மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவிக்கின்றார்.

மாத்தளை மாவட்டத்தில் மூன்று  பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கண்டி மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளிலும், பதுளை மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண் சரிவு அபாயம் நிலவுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை, ஹங்குரான்கெத்த ஆகிய பகுதிகளிலும், பதுளை மாவட்டத்தில் கந்தேகெட்டிய, மீகஹகிவுல, பசறை, பதுளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலும் மண் சரிவு அபாயம் நிலவுகின்றது.

இரத்தினபுரி மாவட்டத்தில்  கஹவத்தை மற்றும் பெல்மதுள்ளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் மண்சரிவு அபாயம் மிக்க பகுதிகளாக பெயரிடப்பட்டுள்ளன.

இதேவேளை, கண்டி மாவட்டத்திலுள்ள சில வீதிகளில் சிறு அளவிலான மண்சரிவுகள் பாதிவாகியுள்ளமையினால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கண்டி – மஹியங்கனை வீதி, கண்டி, ரந்தெனிகல ஊடாக பதுளை வீதி, கண்டி – இராகலை, வலப்பனை ஆகிய வீதிகளிலும் மண்சரிவுகள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலையினால் 54 நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, மழையுடன் கூடிய வானிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்