சீரற்ற காலநிலைக்கு மூவர் பலி; 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு (Video)

சீரற்ற காலநிலைக்கு மூவர் பலி; 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு (Video)

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2014 | 7:02 pm

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் அனர்த்தங்களில் சிக்கிய ஒருவர் காணாமற்போயுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.

சீரற்ற வானிலையால், 05 மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு இலட்சத்து, 52 ஆயிரத்து தொள்ளாயிரத்து 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதால் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

மேலும் அதிக மழையால் மாவட்டத்திலுள்ள கட்டுக்கரை குளத்தின் சகல வான்கதவுகளும் திறக்கப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ரியாஸ் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு உட்பட்ட 73 நீர்த்தேக்கங்களில், 54 நீர்த்தேக்கங்கள் வான் பாயும் மட்டத்தில் காணப்படுவதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்