அனைத்து அமைச்சுக்களும் அலரிமாளிகையில் இருந்தே நிர்வகிக்கப்பட்டது – மைத்திரிபால சிறிசேன

அனைத்து அமைச்சுக்களும் அலரிமாளிகையில் இருந்தே நிர்வகிக்கப்பட்டது – மைத்திரிபால சிறிசேன

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2014 | 8:16 pm

தற்போதைய அரசாங்கம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

அத்தனகல்ல பகுதியில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.

[quote]ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தை உலகில் எங்கும் இல்லாதவாறு புதிதாக அமைப்பதாகவும், உலகின் மிகப் பெரிய அலுவலகமாக அதனை நிர்மாணிப்பதாகவும் மூன்று வருடங்களுக்கு முன்னர் கூறிய போதிலும், இதுவரையும் அதனை செய்யவில்லை. செப்டம்பர் 26ஆம் திகதி பண்டாரநாயக்க அம்மையாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நாம் அனைவரும் ஒரகொல்லைக்கு சென்றோம். எனினும், இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு ஒரகொல்லைக்கு செல்வதற்கு சந்தர்ப்பம் இருக்கவில்லை. இன்று தேசிய அமைப்பாளராக உள்ள பெஷில் ராஜபக்ஸ, அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ளன. எனினும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஒரு உறுப்பினரை கூட இணைத்துக்கொள்ள முடியவில்லை. இந்த கட்சியின் இளைஞர் அமைப்பை முழுமையாக அழித்தனர். இளைஞர்களுக்கு நாளை என்ற பெயரில் பொய்யான ஒரு திட்டத்தை முன்னெடுத்தனர். அதனை அழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மஹிந்த ராஜபக்ஸ ​மேற்கொண்டார். எனக்கும் உங்களுக்கும் ஏனைய அமைச்சர்களுக்கும் தங்களது அமைச்சுக்களில் சுதந்திரமாக செயற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கினார்களா? அனைத்து அமைச்சுக்களும் அலரிமாளிகையில் இருந்தே நிர்வகிக்கப்பட்டது. எனவே இந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அழிவுகளை மக்கள் நன்கு புரிந்துக்கொண்டுள்ளனர்.[/quote]

இந்த கூட்டத்தில் உரையாற்றிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டிய தேவையேற்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.

சமூகத்தில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக, முழு நாடும் ஒன்றிணைந்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் தவிசாளர் அத்துரெலிய ரத்தன தேரர் குறிப்பிட்டார்.

பிரசார கூட்டத்தில் நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரரும் உரையாற்றினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்