அநுராதபுரத்தில் கடும் மழை; அனைத்து குளங்களினதும் வான் கதவுகள் திறப்பு

அநுராதபுரத்தில் கடும் மழை; அனைத்து குளங்களினதும் வான் கதவுகள் திறப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2014 | 9:40 am

அநுராதபுரம் பிரதேசத்தில் பெய்துவரும் அதிக மழையின் காரணமாக பாரிய, நடுத்தர மற்றும் சிறியளவிலான அனைத்து குளங்களினதும் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 20 வான் கதவுகளும் இன்று காலை 6 மணியளவில் திறந்துவிடப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் லலித் டி சில்வா குறிப்பிடுகின்றார்.

கலாவாவி, நுவர வாவி, நாச்சாதூவ, கனதராவை, திசாவாவி உள்ளிட்ட அநுராதபுரத்திலுள்ள பல நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

பிரதேசத்தில் தொடர்ந்தும் பெய்துவரும் கடும் மழையினால் இந்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

அநுராதபுரம் பிரதேசத்தில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பிரதேசத்திலுள்ள பாரிய, நடுத்தர மற்றும் சிறியளவிலான குளங்கள் அனைத்திலும் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக லலித் டி சில்வா கூறுகின்றார்.

ராஜாங்கனை குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், கலா வாவி பெருக்கெடுத்தாகவும், இதனால் புத்தளம் மற்றும் எழுவான்குளம் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாச்சதூவ குளம் இரண்டடி உயரத்திற்கு வான் பாய்வதால், அந்த குளத்தின் ஆறு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

மல்வத்து மற்றும் கனதராவ ஓயாக்களும் பெருக்கெடுத்துள்ளதுடன், அவற்றை அண்டிய தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அநுராதபுரம் மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அதிக மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் நேற்றிரவு முதல் பெய்துவரும் அடை மழையின் காரணமாக காத்தன்குடி பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

அதிக மழையின் காரணமாக திருகோணமலை – மூதூர், கட்டைப்பறிச்சான் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

புத்தளம் மாவட்டத்தில், மதுரங்குளி பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுகின்றது.

ரந்தெனிகல நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

வலப்பனை மற்றும் ஹங்குரன்கெத்த பிரதேசங்களில் பெய்த அதிக மழையின் காரணமாக ரந்தெனிகல நீர்த் தேக்கத்தின் வான் கதவுகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜீ.குமாரசிறி குறிப்பிடுகின்றார்.

இந்த பிரதேசங்களில் தொடர்ந்து மழை பெய்கின்ற சந்தர்ப்பத்தில் நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் மேலும் சில தினங்களுக்கு திறக்கப்பட்டிருக்கும் என மாவட்ட செயலாளர் கூறினார்.

குறிப்பாக வலப்பனை மற்றும் ஹங்குரன்கெத்த பிரதேசங்களில் அதிக மழையை அடுத்து, மண்சரிவு அபாயம் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் டி.பி.ஜீ.குமாரசிறி தெரிவித்தார்.

இதுதவிர ராகலை – தென்னக்கும்புர வரையான வீதியில் மண்மேடு சரிவுகள் மற்றும் மரங்கள் முறிந்து விழக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.

1236090_801078353268793_8512134717734129971_n 10346288_801078349935460_392137898112643240_n 10325342_801078719935423_3259946317999504881_n
படங்கள்:- கலா வாவி


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்