அதுருகிரிய விமான விபத்தில் நால்வர் பலி(Video)

அதுருகிரிய விமான விபத்தில் நால்வர் பலி(Video)

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2014 | 6:57 am

அத்துருகிரிய பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் 5 விமானப்படையினர் இருந்ததாக விமானப்படையின் ஊடகப்பேச்சாளர் வின்ங் கமாண்டர் கிஹான் செனவிரட்ன தெரிவிக்கின்றார்.

விமானத்தை தரையிறக்குவதற்கு விமான ஓடுதளம் தெளிவாக காட்சியளிக்கவில்லை என இரத்மலானை விமான கட்டுப்பாட்டு நிலையத்திற்கு விமானி தகவல் வழங்கியதாக விமானப்படையின் ஊடகப்பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

அத்துருகிரிய பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விமான விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

இந்த விமான விபத்தில் மற்றுமொருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

காயமடைந்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விமானம் வீழ்ந்த சந்தர்ப்பத்தில் அருகிலிருந்து மூன்று வீடுகளின் கூரைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளில் இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, இந்த விமான விபத்தில் காயமடைந்த நபர் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவர் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோவ் ரக விமானமொன்று அத்துருகிரிய, ஹோகந்தர பகுதியில் இன்று அதிகாலை வீழ்ந்து நொருங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்