அரசாங்கத்துடன் இணைந்த திஸ்ஸ அத்தநாயக்க அமைச்சராக பதவிப்பிரமாணம்

அரசாங்கத்துடன் இணைந்த திஸ்ஸ அத்தநாயக்க அமைச்சராக பதவிப்பிரமாணம்

அரசாங்கத்துடன் இணைந்த திஸ்ஸ அத்தநாயக்க அமைச்சராக பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

11 Dec, 2014 | 10:24 am

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அரசாங்கத்தில் இணைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தின் அமைச்சராக இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இந்நிகழ்வு கண்டி ஜனாதிபதி மாளிகையில் தற்போது நடைபெறுகின்றது. இவர் சுகாதாரத் துறை அமைச்சராகவே பதவியேற்றுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, சுகாதார அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இன்று முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட நிகழ்வின்போதே திஸ்ஸ அத்தநாயக்க சுகாதார அமைச்சராக பதவியேற்றார்.

இதன்போது திஸ்ஸ அத்தநாயக்கவின் குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 1989 ஆம் ஆண்டில் முதல் முறையாக பாராளுமன்றத்திற்குத் தெரிவான திஸ்ஸ அத்தநாயக்க, 2001 ஆம் ஆண்டில் உருவான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் மலையக அபிவிருத்தி அமைச்சராக பதவிவகித்தார்.

1961 ஆம் ஆண்டின் மே மாதம் 17 ஆம் திகதி பிறந்த அவர், மாணவ செயற்பாட்டாளராக அரசியலில் பிரவேசித்தார்.

திஸ்ஸ அத்தநாயக்க கடந்த 35 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வருகின்றார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தற்போது செயற்பட்டு வருகின்ற திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த திங்கட்கிழமை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகியதுடன், அரசாங்கத்திற்கு தனது ஆதரவு வழங்கினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்