மைத்திரிபால சிறிசேன வேட்புமனுத் தாக்கல் செய்யும் காட்சியை ஔிபரப்ப நியூஸ்பெஸ்ட்டுக்குத் தடை

மைத்திரிபால சிறிசேன வேட்புமனுத் தாக்கல் செய்யும் காட்சியை ஔிபரப்ப நியூஸ்பெஸ்ட்டுக்குத் தடை

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2014 | 9:13 pm

இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கையை நேரடி ஒளிபரப்புச் செய்வதற்கான காட்சிகளைப் பெறுவதில் இன்று  நியூஸ்பெஸ்ட்டுக்கு இடையூறு ஏற்பட்டது.

வேட்புமனு ஏற்கும் நடவடிக்கையை ரூபவாஹினி அலைவரிசையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யவும் அந்த காட்சிகளை ரூபவாஹினி இலட்சினையின்றி ஏனைய ஊடக நிறுவனங்களுக்கு வழங்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் ஆலோசனை வழங்கியதாக கடந்த 6ஆம் திகதி எம்ரீவி/எம்பீசி ஊடக வலையமைப்பின் தலைவருக்கு அரசாங்க செய்திப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல தொலைநகல் மூலம் அறிவித்திருந்தார்.

இதற்கமைய ஒளிபரப்பு நடவடிக்கைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் காட்சிகளைப் பெறுவதற்கு இலங்கை ரூபவாஹினி கூடுத்தாபனத்தின் நடப்பு விவகார பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் திலக் மஹகமகேயுடன் தொடர்புகொள்ளுமாறும் பேராசிரியர் அத்துகல தனது கடிதத்தில் கூறியிருந்தார்.

இந்தக் கடிதத்தின் பிரகாரம் திலக் மஹகமகேயுடன் தொர்புகொண்டு காட்சிகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

நேரடி ஒளிரப்பு ஆரம்பிக்கப்பட்டு சில நேரத்தில் எமது பொறியியல் பணிப்பாளருடன் தொடர்புகொண்ட இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர்  வேட்புமனு தாக்கல் சந்தர்ப்பம் தொடர்பான நேரடி காட்சிகளை தொடர்ந்தும் வழங்க முடியாது என அறிவித்தார்.

பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய காட்சிகள் வழங்குவதை இடைநிறுத்துவதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து முற்பகல் 10.30 அளவில் ரூபவாஹினி இலட்சனையற்ற காட்சிகளை எமக்கு வழங்குவதை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் இடைநிறுத்தியது.

இந்த சந்தர்ப்பத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வேட்புமனு தாக்கல் செய்துகொண்டிருந்தார்.

இடையூறுகளுக்கு மத்தியிலும் நியூஸ்பெஸ்ட் ரூபவாஹினி கூடுத்தாபனத்தின் இலட்சினையுடன் மைத்திரிபால சிறிசேன வேட்புமனு தாக்கல் செய்வதை ஒளிபரப்பியது.

அதனைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக ஊடகத்துறை அமைச்சின்    செயலாளர் சரித்த ஹேரத்திற்கு நியூஸ்பெஸ்ட் அறிவித்தது.

தொடர்ந்த நியூஸ்பெஸ்ட் செய்திப் பணிப்பாளர் இலங்கை ரூபவாஹினி கூடுத்தாபனத்தின் திலக் மஹகமகேயுடன் தொடர்புகொண்டு தொடர்ந்தும் இலட்சினையற்ற காட்சிகள் கிடைக்காமை தொடர்பாக வினவினார்.

வேட்புமனு தாக்கல் தொடர்பான இலட்சினையற்ற காடசிகளை மீண்டும் வழங்க முடியும் என இதன்போது அவர் அறிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்