ஜனாதிபதி உட்பட 19 பேர் வேட்புமனுத் தாக்கல், இரு ஆட்சேபனைகள் நிராகரிப்பு (Photos)

ஜனாதிபதி உட்பட 19 பேர் வேட்புமனுத் தாக்கல், இரு ஆட்சேபனைகள் நிராகரிப்பு (Photos)

ஜனாதிபதி உட்பட 19 பேர் வேட்புமனுத் தாக்கல், இரு ஆட்சேபனைகள் நிராகரிப்பு (Photos)

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2014 | 4:28 pm

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உட்பட 19 வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கின்றார்.

வேட்புமனுக்கள் தொடர்பில் ஆட்சேபனை தெரிவிப்பதற்கு முற்பகல் 11 மணியிலிருந்து 11.30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, 02 ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவை நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்ததாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டார்.

17 அரசியற்கட்சிகளும், 02 சுயேட்சை உறுப்பினர்களும் இன்று முற்பகல் வேட்புமனுக்களை தேர்தல்கள் செயலகத்தில் தாக்கல்செய்திருந்தன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை காலை 9 மணிமுதல் 11 மணிவரை இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், புதிய ஜனநாயகக் முன்னணி சார்பில் மைத்திரிபால சிறிசேனவும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

ஜனசெத பெரமுண சார்பில் பத்தரமுல்லே சீலரத்ன தேரர், ஒக்கொம வஸியோ  ஒக்கொம ரஜவரு அமைப்பு சார்பில் எம்.பி தெமினிமுல்ல, சோஷலிச சமத்துவ கட்சி சார்பில் பானி விஜேசிறிவர்தன ஆகியோரும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய சோசலிச கட்சி சார்பில் சிறிதுங்க ஜயசூரியவும், எக்சத் லங்கா மஹா சபா கட்சி சார்பில் ஜயந்த குலதுங்கவும், ஸ்ரீலங்கா தேசிய முன்னணி சார்பில் விமல் கீகனகேயும் வேட்புமனு தாக்கல்செய்துள்ளனர்.

ஜ எம் இல்யாஸ் மற்றும் அனுருத்த பொல்கம்பொல ஆகியோர் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல்செய்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.

ஐக்கிய சமாதான முன்னணி சார்பில் நிஸ்கார் மொஹமட் மிஷ்லாரும், முன்னிலை சோசலிச கட்சி சார்பில் துமிந்த நாகமுவவும், ஸ்ரீ லங்கா தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஏ.எஸ்.பி.லியனகேயும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

நவ சம சமாஜக் கட்சி சார்பில் சுந்தரம் மகேந்திரன் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஜனநாயக தேசிய அமைப்பு சார்பில் பிரசன்ன பிரியங்கரவும், எமது தேசிய முன்னணி சார்பில் சட்டதரணி நாமல் அஜித் ராஜபக்ஸவும், தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி சார்பில் ரத்நாயக்க சிறிசேனவும், நவ சிஹல உறுமய சார்பில் சரத் மனமேந்திரவும், எக்சத் லங்கா பொதுஜன கட்சி சார்பில் ருவன்திலக்க பேதுறுஆராச்சியும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 08 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே, 50 இலட்சத்து, 44 ஆயிரத்து, 490 பேர் தகுதிபெற்றுள்ளனர்.

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாடளாவிய ரீதியில் ஒரு பிரசார அலுவலகத்தை அமைக்க முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் மேலும் கூறினார்.

opp rally

opp rally2


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்