”லிங்கா” படத்திற்கு தடை விதிக்கக் கோரி மற்றுமொரு வழக்கு

”லிங்கா” படத்திற்கு தடை விதிக்கக் கோரி மற்றுமொரு வழக்கு

”லிங்கா” படத்திற்கு தடை விதிக்கக் கோரி மற்றுமொரு வழக்கு

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2014 | 3:34 pm

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவுள்ள ‘லிங்கா’ படத்தை வெளியிடத் தடை கோரி மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஒருவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்த பொறியலாளர் பென்னிகுயிக் வாழ்க்கை வரலாற்றை கதையாக எழுதினேன். அதற்கு ‘உயிர் அணை’ எனப் பெயரிட்டேன். எழுத்தாளர் சங்கத்தில் நான் உறுப்பினராக இல்லை என்பதால் சினிமா இயக்குனர்கள் யாரும் எனது கதையைக் கேட்கவில்லை.

2012ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எனது கதையைப் பதிவு செய்தேன். பின்னர் 21-11-2012 அன்று எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினரானேன். 2012ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பல திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், திரைக்கதை எழுத்தாளர்களிடம் எனது கதையைக் கூறினேன். எனது கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் 19-11-2014 அன்று பதிவு செய்தேன்.

இந்த நிலையில், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படம் முல்லை பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டது என்பதை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். ‘லிங்கா’ படம் முழுவதும் எனது ‘உயிர் அணை’ கதையை அடிப்படையாகக் கொண்டதுதான். இப்படத்தின் எழுத்தாளர் பொன்குமரன் எனது கதையை வஞ்சக நோக்கத்துடன் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். இப்படம் எதிர்வரும் 12ஆம் திகதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியானால் எனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும். எனவே, ‘லிங்கா’ படம் வெளியிடத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், எழுத்தாளர் பொன்குமரன் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை பிறப்பித்துள்ளதோடு, வழக்கு எதிர்வரும் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்