மீரியபெத்த மண்சரிவில் உயிர்நீத்த மக்களை நினைவுகூர்ந்து நாட்டின் பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வுகள்

மீரியபெத்த மண்சரிவில் உயிர்நீத்த மக்களை நினைவுகூர்ந்து நாட்டின் பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வுகள்

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2014 | 7:01 pm

கொஸ்லந்தை – மீரியபெத்த மண்சரிவில் உயிர்நீத்த மக்களை நினைவுகூறும் நோக்கில் மலையகம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இன்றும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

மீரியபெத்த மண்சரிவில் தமது உறவுகளையும் உடைமைகளையும் இழந்த மக்களை நினைவுகூறுமாறு பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்கா நாட்டு மக்களிடம் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

லிந்துலை – செந்தில்பத்தனை தோட்டத்தில் மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

தொழிலாளர்கள் தமது வேலையை ஆரம்பிப்பதற்கு முன்னர் கறுப்பு கொடிகளை ஏந்தி துக்கத்தை வெளிப்படுத்தியதுடன், மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இதன்போது ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் மீரியபெத்த மண்சரிவில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் வெள்ளை மற்றும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

நோர்வூட் – வென்ஜர் கீழ் பிரிவிலும் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு, துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.

மீரியபெத்த மண்சரிவில் உயிர்நீத்த மக்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில்
இன்று காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், மட்டக்களப்பு – அம்பலாந்துறை சித்தி விநாயகர் முத்துமாரியம்மன் ஆலயத்திலும் இன்று நண்பகல் விசேட பூஜைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஆத்மசாந்தி பிரார்த்தனைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கலந்துகொண்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்