பிலிப் ஹியுக்ஸ், முதல் மரணமல்ல

பிலிப் ஹியுக்ஸ், முதல் மரணமல்ல

பிலிப் ஹியுக்ஸ், முதல் மரணமல்ல

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2014 | 12:29 pm

வேகமான பவுன்சரால் தான் ஒரு துடுப்பாட்ட வீரர் தாக்கப்படுவார் என்று கிடையாது. சுழல் பந்துவீச்சால்  தாக்கப்பட்டு இறந்தவரும் உண்டு. ஸ்டம்பின் பேல்ஸ் பட்டு கண் பறிபோனவர் உண்டு.

பெர்ட் ஓல்ட்ஃபீல்ட்

1932-33 டெஸ்ட் தொடரின்போது இங்கிலாந்து பவுலர் ஹரோல்ட் லார்வுட் வீசிய பந்தினால், அவுஸ்ரேலிய விக்கெட் காப்பாளர் பெர்ட் ஓல்ட்ஃபீல்ட்டின் மண்டை ஓடு உடைந்தது.

நரி கான்ட்ராக்டர்

1962-ல் பார்படோஸிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர் சார்லி கிரிஃப்பித் பந்துவீச்சில் இந்திய அணித் தலைவர்  நரி கான்ட்ராக்டரின் தலையில் அடிபட்டது. மூக்கு, காதுகளில் ரத்தம் வழிந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கான்ட்ராக்டருக்கு ஆறு நாட்கள் நினைவு திரும்பவில்லை. ரத்தம் செலுத்தப்பட்டு உயிர் பிழைத்தார். பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட் பக்கமே வரவில்லை. கடைசியாக, ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாட நினைத்தார் கான்ட்ராக்டர். ஆனால் அதற்கு அவர் மனைவி அனுமதிக்கவில்லை.

இவென் சாட்ஃபீல்ட்

1975-ல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் பீட்டர் லீவர் வீசிய பந்தினால் ஹெல்மெட் போடாமல் ஆடிய நியூஸிலாந்து வீரரான சாட்ஃபீல்ட்டின் தலையில் பலமான அடிபட, நாக்கு தொண்டைக்குள் சிக்கியதில், உடனே மயக்கமானார். இங்கிலாந்தின் பிசியோதெரப்பிஸ்ட் பெர்னார்ட் தாமஸ் தக்க நேரத்தில் முதலுதவி அளித்து சாட்ஃபீல்டின் உயிரைக் காப்பாறினார். சம்பவம் நடந்தபோது சாட்ஃபீல்டைக் கொன்றுவிட்டதாக தவறாக எண்ணி, லீவர் மைதானத்திலேயே அழுதார்.

ராமன் லம்பா

1998-ல் முன்னாள் இந்திய வீரரான ராமன் லம்பா, டாக்காவில் நடந்த கழக ஆட்டத்தின்போது ஷார்ட் லெக்கில் களத்தடுப்பு செய்துகொண்டிருந்தார். குறிப்பிட்ட ஓவரில் மூன்று பந்துகளே மீதமுள்ளதால் ஹெல்மெட் தேவையில்லை என முடிவெடுத்தார் லம்பா. அந்த சமயம் பார்த்து பேட்ஸ்மேன் வேகமாக லம்பாவின் பக்கம் அடிக்க, பந்து அவர் முன்தலையைத் தாக்கிவிட்டு கீப்பர் பக்கம் சென்று கேட்ச் ஆனது. விக்கெட்டை கொண்டாட எல்லோரும் ஓடிவந்தபோது கீழே விழுந்து கிடந்தார் லம்பா. பிறகு எழுந்து, தடுமாறியபடி பெவிலியனுக்குத் திரும்பினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நினைவிழந்தார். சிலநாள்கள் கழித்து இறந்துபோனார். அப்போது அவருக்கு வயது 38.

அப்துல் அசீஸ்

1959-ல் பாகிஸ்தான் உள்ளூர் போட்டியில் கராச்சி அணிக்காக ஆடிய அப்துல் அசீஸின் நெஞ்சில் சுழல் பந்துவீச்சாளரின் பந்து பதம் பார்க்க, உடனே கீழே தடுமாறி மயங்கி விழுந்தவருக்குப் பிறகு நினைவு வரவேயில்லை. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது இறந்தார். அப்போது அவருக்கு வயது 17.

மார்க் பவுச்சர்

தென் ஆப்பிரிக்காவின் புகழ் பெற்ற விக்கெட் கீப்பரான மார்க் பவுச்சருக்கு நடந்தது விநோதம். ஸ்டெம்பிலுள்ள பெயில்ஸால் இடது கண்ணை இழந்தவர். 2012ல் பயிற்சி ஆட்டம் ஒன்றில், இம்ரான் தாஹீர் வீசிய சுழற்பந்து ஸ்டெம்பை பதம் பார்த்தது. அப்போது ஸ்டெம்பின் மீது இருந்த பெய்ல்ஸ், கீப்பிங் செய்துகொண்டிருந்த பவுச்சரின் இடது கண்ணைத் தாக்கியது. கண்ணிலிருந்து ரத்தம் கொட்டியதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கண் மோசமாக பாதிக்கப்பட்டதால், 998 சர்வதேச ஆட்டமிழப்புகளோடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் பவுச்சர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்