மீரியபெத்த மண்சரிவினால் இடம்பெயர்ந்த சிறுவர்களுக்கு வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்க நடவடிக்கை

மீரியபெத்த மண்சரிவினால் இடம்பெயர்ந்த சிறுவர்களுக்கு வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்க நடவடிக்கை

மீரியபெத்த மண்சரிவினால் இடம்பெயர்ந்த சிறுவர்களுக்கு வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2014 | 11:34 am

கொஸ்லாந்தை, மீரியபெத்த மண்சரிவினால் இடம்பெயர்ந்துள்ள சிறுவர்களுக்கான வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு இடர் முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மண்சரிவினால் இடம்பெயர்ந்த 58 சிறுவர்களுக்காக 35 இலட்சம் ரூபாவை வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

மீரியபெத்தவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு முதற்கட்டமாக வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

வீடுகள் நிர்மாணிக்கப்படும் வரை அந்த மக்களுக்கான அத்தியாவசிய நிவாரணங்களை விநியோகிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதுதவிர பாதிக்கப்பட்ட சகல குடும்பங்களினதும் வங்கிக் கணக்குகளில் அமைச்சினால் இருபத்தையாயிரம் ரூபா வீதம் ஏற்கனவே வைப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மீரியபெத்த மண்சரிவினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு விரைவில் காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹரிகுப்தா சேனாதீர குறிப்பிடுகின்றார்.

மண்சரிவினால் இருப்பிடங்களை இழந்தவர்களின் விபரங்கள் அனர்த்தம் ஏற்பட்ட சில தினங்களுக்குள் திரட்டப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய கொஸ்லாந்தையில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான பாதுகாப்பான காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேலும் கூறினார்.

மீரியபெத்தயில் ஏற்பட்ட மண்சரிவினால் இடம்பெயர்ந்தவர்களுக்கான 72 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தின் மத்திய பாதுகாப்பு படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா குறிப்பிடுகின்றார்.

நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கு இராணுவத் தரப்பு தயார் நிலையில் இருப்பதாகவும், வீடுகளை நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேஜர் ஜெனரல் மனோ பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்